ரேஸ் ராணிகள்



சாலையில் சர்ரென்று நம்மை கடந்து சீறிப் பாயும் இளைஞர்களின் பைக்கையும் அது எழுப்பும் ஓசையையும் கண்டு மிரளாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் அதே காட்சியை, காற்றை விட வேகமாய், சீறிப் பாய்ந்து வரும் மோட்டார் சைக்கிள்களை பந்தய மைதானத்தில் பார்க்கும்போது உற்சாகம் பீறிடுவது இயற்கையே. மோட்டார் சைக்கிள் பந்தயம் என்பது இந்தியாவில் வளர்ந்து வரும் ஒரு விளையாட்டு. ஆனால் பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மோட்டார் சைக்கிள் வீரர்களாக்குவதை விரும்புவதில்லை.

விளையாட்டைப் பொறுத்தவரை கிரிக்கெட், டென்னிஸ், நீச்சல் என மற்ற பிரிவுகளை விரும்பும் பெற்றோர்கள், பைக் ரேஸை விரும்புவதில்லை. அதற்குக் காரணம் இதில் உள்ள அபாயம்தான். எல்லா விளையாட்டுகளிலும் ஆபத்துகள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் மற்ற விளையாட்டுப் பிரிவுகளுக்கு அளிக்கப்படுகிற முன்னுரிமை மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கு அளிக்கப்படுவதில்லை. இந்த விளையாட்டைப் பொறுத்தவரை ஆபத்தான விளையாட்டாகவே பார்க்கிறார்கள். இதில் ஆண்கள் ஈடுபடுவதே அபூர்வம் என்கிற இச்சூழலில் சில பெண்கள் இந்தத் துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படி ட்ராக் ரேஸ் பெண்கள் சிலரின் அனுபவங்கள் உங்கள் முன்.

‘‘இந்தியாவின் முதல் பைக் ரேஸர் ஜோடி நாங்கள்தான்”
- செளந்தர்யா ஆனந்த்ராஜ்

 
“பள்ளியில் படிக்கும்பொழுதே வீட்டிற்கு தெரியாமல் பைக் ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டேன். அப்பொழுது மோட்டார் ரேஸ் பற்றியெல்லாம் தெரியாது. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு பைக்ல போகணும்னு தூரத்திலிருக்கும் கல்லூரியாகப் பார்த்து சேர்ந்தேன். வீட்டில் கியர் பைக் வாங்கி தரச்சொல்லி கேட்டேன். முடியாதுன்னு சொல்லிட்டாங்க. காலேஜ்ல படிக்கும்பொழுதுதான் சோஷியல் மீடியா மூலமாக பைக் ரேஸ் பத்தி தெரிஞ்சிகிட்டேன்.

வீட்ல அதபத்தி சொன்னா சரி, பாக்கலாம்னு சொல்லிட்டாங்க. நான் பைக் எடுத்தே ஆகணும்னு பார்ட் டைம் வேலையெல்லாம் பார்த்து, அப்பா, அம்மா உதவியோட ஒரு வழியாக எமஹா பைக் எடுத்தேன். அதற்குப் பிறகு நண்பர்களிடம் ரேஸ் பற்றி விசாரிச்சேன். ட்ராக்ல பைக் ரேஸ் ஓட்டணும்னா அதிகமா செலவாகும்னு சொன்னாங்க. பொருளாதார ரீதியா எனக்கும் பல பிரச்னைகள் இருந்தது. மறுபடியும் படிச்சுகிட்டே வேலையும் பார்த்துதான் ரேஸுக்குப் போனேன். ஒருவழியாக 2013ல் பைக் ரேஸ் ஓட்டுவதற்கு தயாரானேன்.
 
டி.வி.எஸ் ல ஜெகன் அண்ணா என்பவர்தான் முதலில் எனக்கு ரேஸ் பற்றிய விவரங்களை சொல்லிக் கொடுத்தார். முதன் முதலில் எமஹா ஒன்வே சாம்பியன்ஷிப்லதான் கலந்துகிட்டேன். எனக்கு டிரெய்னரா இருந்தவரும், நண்பர்களும் என்னை ஊக்குவித்தார்கள். அதுதான் எனக்கு ரேஸ் மீது இருந்த ஆர்வத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோனது. நான் பைக் ரேஸ் ஓட்ட போன அந்த நேரத்தில் பெண்களுக்கு என்று தனியாக எந்த டிரெய்னிங் சென்டரோ, அகாடமியோ எதுவும் கிடையாது.

ஞாயிற்றுக் கிழமைகளில் நண்பர்களோடு சேர்ந்து லாங் டிரைவ் போகும்போது அதுவே ஒரு பயிற்சியாக இருந்தது. ஆரம்ப காலத்துல ‘உனக்கு ஏன் இந்த வேலை’ என்று பலபேர் கேட்டாங்க. அந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து எனக்கு தைரியம் சொன்னது ஆனந்த்ராஜ் மட்டும்தான். அவரே எனக்கு குருவாகவும் இருக்கிறார். இவர் 7 முறை தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் மற்றும் ஒன்வே போட்டிகளில் வென்றவர்.

இவரை முதன்முதலில் ரேஸ் டிராக்கில்தான் சந்தித்தேன். துவண்டுபோன நேரங்களில் எனக்குத் தூணாக இருந்து பைக் ஓட்டும் வித்தைகளை எல்லாம் சொல்லிக் கொடுத்தவர்தான் எனக்கு கணவராக வருவார் என்று அன்றைக்கு நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆம் ! இந்தியாவில் முதல் பைக் ரேஸ் ஜோடி நாங்கள்தான். இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன் ட்ராக் ரேஸ் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சுமார் ஒரு மாத சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினேன். அதன் பிறகு வீட்டிலே ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் ரேஸ் பைக் ஓட்ட தொடங்கினேன். அதற்கு என் கணவரும், எனது தன்னம்பிக்கையும்தான் காரணம்.

திருமணத்திற்குப் பிறகு 2014ம் ஆண்டு ஹோண்டா ஒன்மேன் ரேஸில் ஆண்களோடு கலந்துகொண்டேன். அதில் 17 பேரில் நான் 15வது இடத்தைப் பிடித்ேதன். அதில் எனக்கு வருத்தம் என்பதைவிட, எனக்கு பின்னால் 2 பேர் இருக்காங்க என்ற தன்னம்பிக்கை இருந்தது. அதனால் பைக் ரேஸை தொடர்வதற்கு முடிவு செய்தேன். 2015ம் வருடம் கர்ப்பமாக இருந்ததால் அதைத் தொடர்ந்து எனக்கு ஒரு இடைவெளி தேவைப்பட்டது. அதனால் அந்த வருடம் பைக்ரேஸுக்குப் போகவில்லை.

ஆனால் குழந்தை கருவுற்றிருந்த 8 மாதங்கள் வரைக்கும் பைக் ஓட்டிக்கொண்டுதான் இருந்தேன். குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு கியர் பைக் ஓட்டும் பெண்களை ஒன்று திரட்ட முகநூல் பக்கத்தில் ‘Biker’s babes’ என ஒரு பக்கத்தை உருவாக்கி ஒருங்கிணைக்கும் முயற்சியை செய்தேன். நான் எதிர்பார்த்தது போலவே பெண்கள் பலரும் ஆர்வமாக இணைந்தார்கள். அந்த நேரத்தில் ஹோண்டா நிறுவனம் 2016-ல் பெண்களுக்கான ‘Women bike race academy’-யை தொடங்கியது.

அதில் என்னுடைய குழுவினர் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த அகாடமியில் என்னுடைய குழுவினர்தான் அதிகமாக இருந்தார்கள். ஹோண்டா நிறுவனம் ஆச்சர்யப்பட்டது. அவர்களை வைத்தே ஒரு போட்டியையும் நடத்தினார்கள். இப்பொழுது இந்த பைக்கர் பேப்ஸ் குழுவை, ‘உமென் பைக் ரைடர் ஸ்கூல்’ என்று சட்டப்படி மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறேன். என்னுடைய கணவர் மோட்டார் சைக்கிள் ரேஸிங் ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் இருபாலரும் பயிற்சி பெற்று வருகிறார்கள். பைக் ஓட்டுவதும், ட்ராக் ரேஸ் ஓட்டுவதும் வேறு. பைக் ரேஸில் கலந்துகொள்வதற்கு லைசென்ஸ் வாங்கவேண்டும்.

இந்த லைசென்சை ‘FMSCI’ (Federation Of Motor Sports Clubs Of India) என்ற அமைப்பு வழங்குகிறது. ரேஸில் கலந்துகொள்ள விரும்பும் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் இங்கு பதிவு செய்து லைசென்சை பெறலாம். ட்ராக் ரேஸ் ஓட்டும்போது தரமான பாதுகாப்பு உடை, ஹெல்மெட், ஷூ போன்றவற்றை அணிந்து கொண்டுதான் கலந்து கொள்ள வேண்டும். அப்படியாக திருமணத்திற்கு பிறகு 18 முதல் 20 ரேஸ்களில் கலந்து கொண்டுள்ளேன். இன்றுவரை எனக்கு உறுதுணையாக இருப்பவர் என்னுடைய கணவர்தான்.

ஆன்லைன் மூலமாக மீன் வியாபாரமும் செய்கிறேன். அதிகாலையில் ராயபுரம் சென்று அங்கு மீன்களை வாங்கி, என்னிடம் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு டோர் டெலிவரி செய்து வருகிறேன். விடுமுறை நாட்களில் நானும் எனது கணவரும் எங்களுடைய குழந்தையான சௌரஜ் உடன் நேரத்தை செலவிடுகிறோம். டிசம்பர் இறுதியில் சென்னை இருங்காட்டுக் கோட்டையில் நடைபெறும் ட்ராக் ரேஸில் கலந்துகொள்கிறேன்’’ என்கிறார் செளந்தர்யா ஆனந்த்ராஜ். இப்பொழுது இவர்களது குழந்தைக்கு பாடமே ‘A’ for ஆக்ஸிலேட்டர், ‘B’ for பிரேக் வகுப்புதான் நடந்து கொண்டிருக்கிறது.

“சர்வதேச அளவில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன்”
 - ஸ்ருதி நாகராஜன்


“7ஆம் வகுப்பு படிக்கும்போதே கியர் பைக் மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அப்பாவிடம் எனக்கு கியர் பைக் ஓட்டுவதற்கு கற்றுத் தரச்சொல்லி அடிக்கடி கேட்டதுண்டு. ஆனால் அப்பாவோ கீழே விழுந்து விடுவேன் என்று கற்றுத்தர மறுத்துவிட்டார். எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் எனது சித்தப்பாவிடம் உதவி கேட்டேன். அவர் அவ்வப்போது என் அப்பாவிற்கு தெரியாமல் கற்றுக்கொடுத்தார். நானும் குறுகிய நாட்களிலேயே கியர் பைக் ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டேன்.

பள்ளி முடித்து, கல்லூரியில் சேர்ந்த பிறகு அப்பாவிற்கு தெரியாமல் பைக் எடுத்து ஓட்டி சந்தோஷப்படுவதுண்டு. நாளடைவில் நண்பர்களோடு சேர்ந்து ஒவ்வொரு வார இறுதியிலும், பைக் எடுத்துக்கொண்டு நீண்ட தூர பயணங்கள் அடிக்கடி சென்று வந்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் ேஹாண்டா மோட்டார் நிறுவனம் 2016  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெண்களுக்காக பிரத்யேகமான மோட்டார் ரேஸ் அகாடமி ஒன்றை உருவாக்கியது. அது எனக்கு சிறந்த வாய்ப்பாக இருந்தது. அங்கிருந்துதான் என்னுடைய மோட்டார் சைக்கிள் விளையாட்டுப் பயணம் தொடங்கியது.
 
2016 பிப்ரவரி 20 மற்றும் 21 அன்று சென்னை இருங்காட்டுக் கோட்டையில் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு சொந்தமான ட்ராக்கில் நடைபெற்ற பந்தயத்தில் நானும் கலந்துகொண்டேன். முதல் முறை என்பதால் பந்தயக் களம் என்னுள் சொல்ல முடியாத உணர்வுகளை தந்தது. சாதாரணமான சாலையில் ஓட்டுவதற்கும் ரேஸ் ட்ராக்கில் ஓட்டுவதற்கும் வித்தியாசம் இருந்தது. சாலைகளில் இருக்கக்கூடிய வளைவுகள் நமது வேகத்தை குறைத்து பாதுகாப்பாக செல்வதற்குப் பயன்படுகிறது.

ஆனால் ரேஸ் ட்ராக்கில் உள்ள வளைவுகளிலிருந்துதான் போட்டியானது தலைகீழாக மாறும். பாதுகாப்புக்காக கொடுக்கப்படும் தலைக் கவசம் மற்றும் பாதுகாப்பு உடைகளின் அவசியம் அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது. அதன் பிறகு பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வந்தேன். இப்படியாக 9 மாத காலமாக இந்த களத்தில் பயணித்து வருகிறேன். இந்த 9 மாத காலத்தில் இரண்டுமுறை ேரஸில் விழுந்திருக்கிறேன்.

இந்த போட்டிக்கான தனித்துவமே விழுந்த பிறகு ஓய்வு எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் எழுந்து வெற்றியை நோக்கிப் பயணிக்கும் தன்னம்பிக்கைதான். பாதுகாப்பு உபகரணங்கள் இருந்ததால் சிறிய காயங்களுடன் தப்பித்தேன். இப்பொழுது ஹோண்டா சி.பி.ஆர் 150 சிசி பைக் ஓட்டி வருகிறேன். இதில் மணிக்கு சுமார் 128 கி.மீ வரை ஓட்ட முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை 3 இடங்களில் மட்டுமே ரேஸ் ட்ராக் உள்ளது.

சென்னையில் இருங்காட்டுக் கோட்டையில் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு சொந்தமான ட்ராக், கோவையில் பிரபல கார் பந்தய வீரர் கரிவரதன் பெயரில் அமைந்துள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே, நொய்டாவில் ஜேபி குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் இவைதான் அவை. புதிதாக மேலும் பல ரேஸ் டிராக்குகள் உருவாகும்போது, அதிகம் பெண்கள் பயிற்சி பெறுவதற்கும், இந்த விளையாட்டில் பங்கு பெறுவதற்கும் எளிதாக இருக்கும்.

இப்பொழுது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பைக்ரேஸ் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு முறையாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மோட்டார் ரேஸ் பந்தயத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் போட்டிப்போட முடியும். மற்ற விளையாட்டுகளில் பெண்களுக்கு எதிராக பெண்கள்தான் போட்டியாளராக இருப்பார்கள். அப்படி இல்லாமல் ஆணுக்கு பெண் நிகர் என்ற சமநிலை இந்த விளையாட்டில் உள்ளது.

தேசிய அளவில் பெண்களுக்கான போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வந்த எனக்கு எஃப்.எம்.எஸ்.சி.ஐயும் எம்.எம்.எஸ்.சியும் (MMSC - Madras Motor Sports Club) இணைந்து சர்வதேச அளவில் நடைபெறவுள்ள மோட்டார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள மிகப்பெரிய வாய்ப்பினைக் கொடுத்தார்கள். சர்வதேச அளவிலான போட்டிகளில் பெரும்பாலும் நன்றாக பயிற்சிப் பெற்ற ஆண் போட்டியாளர்கள்தான் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதன் முறையாக பெண்களை தேர்வு செய்தது எங்களை போன்ற வீராங்கனைகளுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தந்தது. 2016 நவம்பர் மாதம் தைவான் நாட்டில் சர்வதேச அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. அதில் ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த 13 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பாக கலந்து கொண்ட இரண்டு பெண் போட்டியாளர்களில் நானும் ஒருவராக கலந்துகொண்டேன்.

எங்களோடு போட்டியிட்ட மற்ற நாட்டு வீரர்கள் அனைவருமே ஆண்களாக இருந்தார்கள். நாங்கள் இருவர் மட்டுமே பெண்களாக இருந்தோம். பிற நாட்டு வீரர்களிடம் போட்டியிட்டு இந்தியா 4வது இடத்தைக் கைப்பற்றியது. பெண்களோடு மட்டுமே போட்டிகளை சந்தித்து வந்த எனக்கு சர்வதேச அளவில் ஆண்களோடு போட்டி போடும்போது மிகப்பெரிய சவாலாக இருந்தது. போட்டியில் நான்காவது இடம் பிடித்து, இந்தியாவின் தேசியக்கொடியை உயர்த்திப் பிடித்த போது பெருமையாக இருந்தது.

ஆண்களை மட்டுமே மையப்படுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில், தற்பொழுது அதை உடைத்தெரியும் விதமாக பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும்தான் பைக் ரேஸில் பெண்கள் குறைவாக இருக்கிறார்கள். காரணம் சாதாரண பின்னணியில் இருந்து வருபவர்கள் அவ்வளவு எளிதில் பைக் ரேஸ் வீரராகி விட முடியாது. அதற்கு நிறைய செலவாகும். பைக் விலை, ஹெல்மெட், உடை என எல்லாமே செலவு மிகுந்த விஷயமாக இருக்கிறது.

விளையாட்டு ஆர்வலர்கள் சிலரால் பெண் போட்டியாளர்களுக்கு ‘ஸ்பான்சர்ஸ்’ கிடைப்பதற்கு வாய்ப்புகள் உருவாகும். அவ்வாறு கிடைக்கக்கூடிய வாய்ப்பினை திறம்பட செயல்படுத்த பெண் போட்டியாளர்கள் தயாராக இருக்கிறார்கள். அடுத்தகட்டமாக ஆண்களோடு சர்வதேச அளவில் போட்டியிடவேண்டும். அனைத்து நாடுகளிலும் நடைபெறக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்’’ எனக்கூறும் ஸ்ருதி நாகராஜன், ‘‘நான் ஒரு பைக் ரேஸர். ஆனால் என்னிடம் சொந்தமாக பைக் எதுவும் இல்லை’’ என்று நம்மை வியப்படையச் செய்தார்.

‘‘அப்பாதான் எனக்கு குரு”
- நிரஞ்சனி ரவிசங்கர்

 
“கடந்த ஒரு வருடமாகத்தான் ட்ராக் ரேஸில் கலந்துகொண்டு வருகிறேன். பள்ளியில் படிக்கும்போது அப்பாதான் எனக்கு பைக் ஓட்ட கற்றுக்கொடுத்தார். நான் 8-ம் வகுப்பு படிக்கும் போது அப்பா கியர் பைக் வாங்கினார். அதை ஓட்டியதற்கு பிறகு பைக் மீது என்னுடைய ஆர்வம் அதிகமானது. பிறகு கல்லூரியில் நண்பர்களோடு சேர்ந்து அடிக்கடி பைக் ரைடு செல்வதுண்டு. இப்படியாக கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தனியாகவும் நண்பர்களோடும் பைக்கில் சுற்றியுள்ளேன்.

அந்தக் காலகட்டத்தில்தான் பைக் ரேஸ் பற்றி நண்பர்கள் மூலமாக தெரிந்துகொண்டேன். பைக் ரேஸில் வெற்றி, தோல்வி என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இதில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டியது தன்னம்பிக்கைதான். நான் பைக் ரேஸில் கலந்து கொள்வதற்கு உறுதுணையாக இருந்தவர் என்னுடைய அப்பாதான். பைக் ரேஸ் விளையாட்டு சென்னையில் இருக்கிறது என்பதே எனது அம்மாவிற்கு தெரியாது. நான் பைக்ரேஸில் கலந்து கொள்வதை எனது அம்மா விரும்பவில்லை.

ஆனால் அதற்குப்பிறகு என்னுடைய ஆர்வத்தை அவர்கள் புரிந்துகொண்டு பைக், ஹெல்மெட், ரேஸிங் ஷூட் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்தார்கள். அதுமட்டுமல்ல என்னுடைய ஸ்பான்சரே எனது பெற்றோர்கள்தான். முதல் முறையாக ரேஸ் ட்ராக் உள்ளே சென்றபோது வித்தியாசமாக இருந்தது. ரேஸ் ட்ராக்கில் பைக் ஓட்டுபவர்களை பார்க்கும்போது முதலில் பயமாகத்தான் இருந்தது. ஆனால் நான் கலந்து கொண்டு கீழே விழுந்த பிறகு, அந்த பயமெல்லாம் மறைந்து போனது.
 
அந்தக் களம் எல்லாவற்றையும் மறக்க வைத்து, ஜெயிக்க வேண்டுமென்ற ஒற்றைக் குறிக்கோளோடு என்னை பயணிக்க வைத்தது. விழுந்தாலும் யாருடைய துணையும் இல்லாமல் தானாகவே எழுந்து மறுபடியும் போட்டி போடக்கூடிய தைரியத்தை கற்றுக்கொடுத்தது. இந்த விளையாட்டை பெண்கள் அதிகம் நேசிக்கிறார்கள். நான் இதுவரை பெண்களோடு மட்டும்தான் போட்டியிட்டு இருக்கிறேன்.

ஆண்களோடு போட்டி போடக்கூடிய வாய்ப்பு இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. ஒரு பெரிய ரேஸுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். இந்த விளையாட்டில் கலந்துகொள்ள பொருளாதாரம் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்கள் இந்த விளையாட்டில் நீடிப்பது  கடினம். இதுதான் இந்த விளையாட்டில் பெண்களின் பங்கு குறைவாக இருப்பதற்கும் காரணம்.

திறமைகளை ஆய்வு செய்து அவர்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்போது எல்லோருமே சாதிக்க முடியும். நான் ஒரு நல்ல பைக்ரேஸரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒரு நல்ல பைக் ரைடர் என என்னால் சொல்ல முடியும். நான் தற்பொழுது சி.பி.ஆர் 150சிசி பைக் பயன்படுத்தி வருகிறேன். இந்த பைக் எங்களது குடும்பத்தில் ஒரு நபராக இருக்கிறது. தற்பொழுது நான் தமிழ்நாடு சமூகவியல் கல்லூரில் இறுதி ஆண்டு படித்து வருகிறேன். நேரம் கிடைக்கும்போது ‘மாடலிங்’ செய்து வருகிறேன்” என்கிறார் நிரஞ்சனி ரவிசங்கர்.

-  ஜெ.சதீஷ்