வானவில் சந்தை



ஒளியும் ஒலியும்

மூன்று மாதங்களாக தொலைக்காட்சித் தொடர்பைத் துண்டித்து விட்டதாகச் சொன்னார் நண்பர் ஒருவர். எனக்கு ஆச்சரியம். சில மாதங்களுக்கு முன்தான் அவர் முப்பதாயிரம் விலையில் ஒரு 32 இன்ச் சாம்சங் எல் ஈ டி தொலைக்காட்சிப் பெட்டி(!) வாங்கியிருந்தார். நண்பர் ஒரு திரைப்பட விரும்பி. அதோடு, ஃபாக்ஸ் லைஃப், ஹிஸ்டரி சானல்களின் வினோதமான தமிழ் மொழிபெயர்ப்பு நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பவர். ஏனென்று கேட்டேன்.

அதற்கு,யவீட்டில் எல்லையற்ற உயர் வேக ப்ராட்பேண்டு இன்டர்நெட் இருப்பதாகவும், தேவையான நிகழ்ச்சிகளை யூட்யூபிலும், பிற இணையதளங்களிலும் கண்டுகொள்வதாகவும் சொன்னார்.‘சீரியல்?’, என்று நான் கேட்டதற்கு, வீட்டில் தொலைக்காட்சி தொடர்கள் எதுவும் பார்ப்பதில்லை என்றும் அப்படியே பார்ப்பதென்றாலும் சில இணையதளங்கள் அதற்கென்று இருக்கின்றன என்றார். என்ன இருந்தாலும் ரிமோட்டில் மாற்றிக் கொண்டே இருக்கும் வசதி இல்லையே என்றேன்.

நமக்கு விருப்பப்பட்ட நேரத்தில் விரும்பியதைப் பார்ப்பதுதான் உண்மையான வசதி என்றார். சரிதான். ஆனால், பத்து வருடங்களுக்கு முன் இவ்வளவு அதிவேக இணையசேவைகளும் கிடையாது, புத்திசாலி(!) தொலைக்காட்சிப் பெட்டிகளும் கிடையாது.

கடந்த பத்து, பதினைந்து வருடங்களில் தொலைக்காட்சிப் பெட்டி தொலைக்காட்சித் திரையாய் உருமாறிவிட்டது. அறையில் ஒரு மேசையளவு இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது போய், இப்போது இருப்பதே தெரியாமல் சுவரோடு சுவராய்த் தொங்கிக் கொண்டிருக்கிறது. முந்தைய தொலைக்காட்சிப் பெட்டிகள் அதிக பட்சம் 29 இன்ச் திரை கொண்டிருந்ததென்றால், இப்போதைய திரைகள் 28 இன்ச்சிலிருந்து 110 இன்ச் வரையிலான அளவில் கிடைக்கின்றன.

ஆக, முன்னெப்போதையும் விட ஒரு தொலைக்காட்சித் திரையை தேர்ந்தெடுப்பது இப்போது சவாலானது. தேர்ந்தெடுக்கையில் குறைந்த பட்சம் கருத வேண்டிய மூன்று விஷயங்கள் இதில் உள்ளன. திரை அளவு, திரை துல்லியம் (ரெசல்யூஷன்) மற்றும் தொழில்நுட்பம். திரை அளவைத் தேர்ந்தெடுப்பதே இதில் முதன்மையானது. ஏனென்றால் இது வெறும் பணம் தொடர்பான விஷயம் (திரை அளவு கூடக் கூட விலை கூடும்) மட்டுமல்ல. பார்வை தொடர்பானதும் கூட.

உதாரணமாக, ஒருவர் 32 இன்ச் திரையை வாங்குகிறாரென்றால், அவருக்கும் திரைக்கும் குறைந்த பட்சம் நான்கு அடி இடைவெளியாவது இருக்க வேண்டும். அந்தளவு இடைவெளி இல்லாத அறையில் 42 இன்ச் திரையை வாங்கி வைத்துப் பார்த்தால் கண்களுக்கே கேடு. அதே வேளை, 10 அடி நீளமுள்ள அறையில் 32 இன்ச் திரை வைத்தாலும் பார்வைக்கு ஒவ்வாது. பார்வையாளருக்கும் திரைக்கும் உள்ள இடைவெளியே திரையளவைத் தீர்மானிக்கும் முதல் காரணி. அதாவது, வீட்டிலுள்ள அறையின் அளவைப் பொருத்ததே தேர்ந்தெடுக்கும்
திரையின் அளவு.

இரண்டாவதாக பார்க்கவேண்டியது திரையின் துல்லியம். இது பிக்சல்களால் அளவிடப்படுகிறது. இப்போது குறைந்த பட்சம் 720p (ஹை டெஃபனிஷன்) துல்லியத்துடன்தான் தொலைக்காட்சித் திரைகள் வருகின்றன. 1080p (முழு ஹை டெஃபனிஷன்) கூடுதல் துல்லியம் கொண்டது. இந்தியாவில் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (அதற்குத் தனியாக ஹெச் டி தொலைக்காட்சி சேவையைப் பெறவேண்டும்) 720p துல்லியம் கொண்டவையே.

1080p துல்லியம் கொண்ட திரைப்படத்தையோ காணொளியையோ காண ஒருவர் டிவிடி/ப்ளூ ரே ப்ளேயர் அல்லது பென் டிரைவைப் பயன்படுத்தியாக வேண்டும். திரையளவு கூடக்கூட துல்லியமும் கூட வேண்டும். இப்போது 1080pயை விட நான்கு மடங்கு அதிக துல்லியம் கொண்ட பெரிய திரைகள் (அல்ட்ரா ஹெச் டி) கிடைக்கின்றன.

60 இன்சிலிருந்து 110 இன்ச் வரையிலான அளவில், லட்சக்கணக்கான ரூபாய் விலையில் இவை இப்போது விற்கப்படுகின்றன. மூன்றாவதாக தொழில்நுட்பம். ஒரு தொலைக்காட்சித் திரை இப்போது கேபிள் வழித் தொலைத்தொடர்பு மட்டும் கொண்டிராமல், ஒரு கணினியுடன் இணைப்பதற்கான தொடர்புக் கண்ணிகளையும் (விஜிஏ /ஹெச் டி எம் ஐ) கொண்டுள்ளது. இதன் மூலம் தொலைக்காட்சித் திரையை ஒரு கணினித் திரையாக மாற்றிவிட முடியும்.

ஒரு பென் டிரைவில் உள்ள திரைப்படங்கள், இசைக்கோவைகள், காணொளிகள், புகைப்படங்கள் போன்றவற்றை வேறு கருவிகளின் துணையேதுமின்றியே இப்பொதுள்ள தொழில்நுட்பம் மூலம் தொலைக்காட்சித் திரைகள் காட்டுகின்றன. இது இப்போது ஓர் அடிப்படையான தொழில்நுட்பமாகிவிட்டது. இவற்றிலிருந்து கூடுதல் விலை வைத்து விற்கப்படும் ‘ஸ்மார்ட்’ தொலைக்காட்சித் திரைகள், இணையத்தோடு நேரடியாகத் தொடர்பு கொள்ளும் தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. அதற்காகவே கூடுதல் விலை.

உண்மையில் சில கருவிகளின் (கூகுள் க்ரோம்கேஸ்ட் போன்றவை) மூலம் சாதாரண தொலைக்காட்சித் திரையையும் ஸ்மார்ட் தொலைக்காட்சி ஆக்கிவிட முடியும். இதெல்லாம் தேவைப்படாதவர்கள், ஆடம்பரத்திற்காக கூடுதல் விலை கொடுத்து ‘ஸ்மார்ட்டாக’ தோற்றமளிக்க விரும்புவது பண விரயம் மட்டுமே. மேற்கண்ட மூன்று காரணிகளுக்கும் இணையான ஒன்று தொலைக்காட்சித் திரையின் விலை. எல்.ஈ.டி திரைகளின் விலை கடந்த ஐந்து வருடங்களில் பெருமளவு குறைந்துவிட்டது.

பெரும் பணக்காரர்கள் மட்டுமே வைத்திருந்த நிலை மாறி இப்போது நடுத்தர வர்க்கத்தினரும் சிரமமில்லாமல் வாங்கும் விலையில் அவை கிடைக்கின்றன. பதினைந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு தரமுள்ள 32 இன்ச் தொலைக்காட்சித் திரையை இன்று வாங்க முடியும். இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிவிடலாம். விலை வீழ்ச்சிக்குக் காரணமான பிராண்டுகளின் பெருக்கம் தேர்வைச் சிக்கலாக்கிவிட்ட ஒரு காலம் இது.

அதனால் விற்பனைக்குப் பின்னான சேவையை அளிக்கும் திறனுள்ள பிராண்டைத் தேர்வு செய்வது முக்கியம். இந்தியாவில் சோனி, எல்ஜி, சாம்சங் ஆகியவை வாடிக்கையாளர் சேவையில் முதலிடம் பெறுகின்றன. வேறு சில பிராண்டுகளும் கடும் போட்டியை அளிக்கின்றன. இன்றைக்கு ஒரு சராசரி மனிதன் தனது செல்பேசித் திரையிலும், கணினித் திரையிலும் தொலைக்காட்சித் திரையிலுமாகப் பல மணி நேரங்களைக் கழிக்கிறான். வெவ்வேறு அளவிலான எல்.ஈ.டி திரைகளின் வழியே அலைவுறும் பிம்பங்களில் ஒரு நாளின் பெரும் நேரத்தைக் கழிக்கும் எவருக்கும், அண்மையிலுள்ள முப்பரிமாண உயிர்களின் தொடர்பு அருகிக்கொண்டே வருகிறது.

(வண்ணங்கள் தொடரும்)