தெருவுக்கு தெரு தியேட்டர்கள்



தமிழ் சினிமா தயாரிப்பு தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் ‘டிஜிட்டல்’ என்றால், சினிமா திரையீட்டின் அடுத்த கட்டம் தெருவுக்கு தெரு சினிமா தியேட்டர்கள். முதன் முதலில் டிஜிட்டலில் சினிமா வந்தபோது பிலிம் இல்லாமல் சினிமாவா, சாத்தியமே இல்லை என்று சொன்னவர்கள், இப்போது தங்கள் படத்தையும் டிஜிட்டலில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். 2014ம் ஆண்டுடன் பிலிம் சுருள்கள் விலகிக் கொள்ளும். அடுத்து டிஜிட்டலின் முழுமையான ஆட்சிதான்.


அதேபோலத்தான் திரையீடுகளும். முதலில் தெருவில் வேட்டி கட்டி 15 எம்எம் புரொஜக்டரில் படம் போட்டு திரைக்கு பக்கத்தில் இருந்து கதை சொன்னார்கள். அடுத்து அதுவே சர்க்கஸ் கூடாரம் போன்று நடமாடும் டெண்டு கொட்டகைகளுக்கு வந்தது. அப்புறம் நடமாடும் கொட்டகைகள் நிரந்தர டெண்டு கொண்டகைகள் ஆனது.

 அதன் பிறகு டெண்டு கொட்டகைகள் தியேட்டர்களானது. கார்பன் குச்சி தேயத் தேய படம் காட்டினார்கள். திரைக்குப் பின்னால் இருந்து வந்த வசனங்களும், பின்னணி இசைகளும் பின்னாலும் பக்கவாட்டிலும் வந்தன. அதன் பிறகு நம் காதுக்கு அருகில் வந்தது, நம்மைக் கடந்து சென்றது. இப்படி கால மாற்றத்துக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்றுக்கொண்டு திரையீடுகளும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டே வந்திருக்கிறது.

தொலைக்காட்சி, திருட்டு விசிடியின் வருகைக்குப் பிறகு மக்கள் தியேட்டர்களுக்கு வருவதை குறைத்துக் கொண்டார்கள். அதனால் பல தியேட்டர்கள் திருமண மண்டபங்களாயின, ரைஸ் மில்களாயின, குடோன்கள், ஷாப்பிங் மால்கள் ஆயின. இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு தியேட்டர் இருந்த இடத்தில் 5 தியேட்டர்கள் கட்டி மால்கள் ஆக்கினார்கள். ஏன் இந்த முரண்பாடு? இதற்குக் காரணம் என்ன? மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க தயார். அதற்கேற்ப தியேட்டர்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குறைந்த செலவில் டிவிடியிலேயே பார்த்து திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.

மால் தியேட்டர்கள் வேகமாக வளர்ந்தாலும் அவை ரசிகனின் பணத்தை இன்னொரு கோணத்தில் பிடுங்க ஆரம்பித்தன. சொகுசான இருக்கைகள், பளபள தரைகள், பளிச்சென்ற திரையீடுகள் என சந்தோஷப் படுத்திவிட்டு 120 ரூபாய் டிக்கெட், பார்க்கிங் 20 ரூபாய், ஒரு டீ 40 ரூபாய், ஒரு சமோசா 30 ரூபாய் என்று ஆக்டோபஸ் கரங்கள் கொண்டு பணம் பிடுங்கின. ஆக மொத்தம் மால் தியேட்டர்கள் அப்பர் மிடில் கிளாஸ் மற்றும் உயர்தர வகுப்பு மக்களுக்கானது என்று ஆகிவிட்டது.

ஆனால், படம் பார்க்க வருகிறவர்களில் பெரும்பாலானோர், உழைக்கும் அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர மக்கள். இவர்கள் மூத்திர நெடி நிறைந்த தியேட்டர்களுக்கு போகத் தயாராக இல்லை. மால் தியேட்டருக்கு செல்லும் அளவிற்கு வசதியில்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒன்றுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் அதுதான் நாளை தெருவுக்குத் தெரு அமையப்போகும் மினி தியேட்டர்கள். அதிகபட்சம் 50 முதல் 100 பேர் அமர்ந்து பார்க்கும் மினி தியேட்டர்கள் வருகின்றன.

ஒருவருக்கு சொந்தமாக தனி வீடு இருந்தால் கீழே அவர் குடியிருந்து கொண்டு மேல் போர்ஷனை 50 பேர் அமர்ந்து பார்க்கும் மினி தியேட்டராக மாற்றிக் கொள்ளலாம். தெருவில் சின்ன ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டினால் அதன் மாடியை தியேட்டராக மாற்றிக் கொள்ளலாம். பஸ் ஸ்டாண்ட் மாடி, ரெயில் நிலைய மாடி இவற்றில் தியேட்டர்களை உருவாக்கலாம். இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பார்க்கிங் வசதியும், சின்ன கேண்டீனும் ஏற்பாடு பண்ணிவிட்டால் தியேட்டர் ரெடி. புரொஜக்டர் ரூம் என்று தனியாக எதுவும் தேவையில்லை. சின்னதாக ஒரு கியூப் சிஸ்டம் போதும். இப்போதுள்ள விலைவாசிப்படி இப்படி ஒரு மினி தியேட்டர் அமைக்க 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை போதும் என்கிறார்கள்.

30 ரூபாய் கொடுத்து திருட்டு விசிடி வாங்க நினைப்பவர்கள் அதே 30 ரூபாய்க்கு தியேட்டர் எபெக்டில் படம் பார்த்து 5 ரூபாய்க்கு டீ குடித்து 5 ரூபாய்க்கு சமோசா சாப்பிட்டு விடுவார்கள். அரசின் அனுமதி ஒன்றுக்காகத் தான் வெயிட்டிங். அரசு இதற்கென சில நெறிமுறைகளை அறிவித்து அனுமதி அளித்துவிட்டால் தெருவுக்கு தெரு சினிமா தியேட்டர்தான். (படத்தில் இருக்கும் நடிகைகள் அனுஷ்மிரிதி ஸாகர், சக்தி சௌத்ரி, ரூபி அகமத் ஆகியோருக்கும் இந்தச் செய்தி க் கும் தொடர்பில்லை)

- மீரான்