எனக்கு நானே எதிரியானேன்...



‘நம்ம ஊரு நாயகன்’ படத்தை தொடங்கிய போது தன் சொந்தங்கள் நம்பிக்கை வைக்காத நிலையில் நண்பர்கள் நேசக்கரம் நீட்டிய அனுபவத்தைக் குறித்து பேச ஆரம்பித்தார் இயக்குநரும் நடிகருமான ‘யார்’ கண்ணன். ‘‘என் மீது நம்பிக்கை வைத்து கோவை நண்பர்கள், திருச்சி நண்பர்கள் ஆரம்பித்த ஒலிம்பிக் சினிமாஸ் நிறுவனத்தில் என்னையும் ஒரு பங்குதாரராக நியமித்து ‘நம்ம ஊரு நாயகன்’ படத்தை தயாரித்தார்கள்.


நாயகியாக அப்போது பிரபலமாக இருந்த பானுப்ரியாவின் தங்கை நிஷாந்தியை ஒப்பந்தம் செய்யலாம் என்று முடிவு செய்திருந்தேன். பட பூஜை வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்த வேளையில் ஏவி.எம்.சரவணன் சாரை சந்தித்து பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு கொடுத்தேன்.

அப்போது படத்தின் விபரங்களை கேட்டவர், ‘கதாநாயகி யார்?’ என்று கேட்டார். நான், ‘நிஷாந்தி’ என்று பதில் அளித்தேன். ‘நீங்கள் பட்ஜெட்டுக்குள் படம் எடுக்க நினைக்கிறீர்கள். பிறகு ஏன் சம்பளம் அதிகம் வாங்கும் நடிகையை ஒப்பந்தம் செய்கிறீர்கள்? புதுமுக நடிகையை ஒப்பந்தம் செய்யலாமே. ‘குரு சிஷ்யன்’ படத்தில் கௌதமி என்கிற புதுமுகம் அறிமுகமாகவுள்ளார். உங்கள் கதைக்கு பொருத்தமாக இருந்தால் அவரை நடிக்க வைத்து பட்ஜெட்டை மிச்சம் பண்ணுங்கள்’ என்று ஆலோசனை வழங்கினார்.

அவரது ஆலோசனை எங்களுக்கு நலமாக தோன்றியது. ராமராஜனின் அக்காவாக ஸ்ரீப்ரியா நடித்தார். அதுவும் எப்படி? முதல் நாள் இரவு கதையை சொன்னேன். மறுபேச்சு இல்லாமல் மறுநாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதேபோல் நட்புக்காக மிக குறைந்த சம்பளத்தில் நடித்தார். படமும் இனிதே நிறைவடைந்தது. ‘பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்...’ என்கிற பாடலுக்கு ஏற்ப அதுவரை படம் தயாராகியும் ரிலீசாகாமல் இருந்த ராமராஜனின் ‘செண்பகமே செண்பகமே’ படம் அப்போதுதான் வெளியானது. அதே சமயம் ‘குரு சிஷ்யன்’ படமும் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் வெளிவந்ததால் ‘நம்ம ஊரு நாயகன்’ படத்துக்கு மிகப் பெரிய ஓப்பனிங் கிடைத்தது. ராமராஜனையும் கௌதமியையும் வெற்றிப் பட நாயகனாகவும், நாயகியாகவும் காண்பித்ததால் ‘நம்ம ஊரு நாயகன்’ மிகப் பெரிய வசூல் புரட்சி செய்தது. 

இந்தப் படத்துக்குப் பிறகு எனக்கும் ராமராஜனுக்கும் இடையே இணக்கமான நட்பு ஏற்பட்டது. தொடர்ந்து ராமராஜனை வைத்து ‘அன்புக் கட்டளை’ படத்தை இயக்கினேன். அந்த படம் 100 நாட்கள் ஓடியது. அதுவரை டவுசர் அணிந்து நடித்த ராமராஜன் ‘நம்ம ஊரு நாயகன்’, ‘அன்புக் கட்டளை’ ஆகிய இரு படங்களிலிருந்துதான் பேன்ட், சட்டை, கோட் என மாடர்ன் உடைகளை அணிந்து நடிக்க ஆரம்பித்தார். எங்கள் இருவரின் நட்பை பார்த்து திரையுலகம் வியந்தது. ஏனெனில் ராமராஜனின் பிறந்த நாளுக்கு ‘பூக்காரன்’, ‘காவலன்’, ‘கூவுங்கள் சேவல்களே’, ‘தாய்க்கு தலை வணங்கு’ உட்பட 7 புதுப்பட விளம்பரங்களைக் கொடுக்கும் அளவுக்கு எங்களுக்குள் ஆழமான நட்பு இருந்தது.

ஆனால், அந்த அறிவிப்புக்குப் பிறகு வெளியான ‘கரகாட்டக்காரன்’ ராமராஜனை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றதால் கால்ஷீட் பற்றாகுறை ஏற்பட்டது. ராமராஜன் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 7 படங்களை தொடர முடியவில்லை. அதுமட்டுமில்ல, ராமராஜனின் ஆதரவு இயக்குநர் என்கிற அடையாளமும் எனக்கு இருந்ததால் அப்போது பிரபலமாக இருந்த பிரபு, கார்த்திக் போன்ற நடிகர்கள் எனக்கு நண்பர்களாக இருந்த போதும் அவர்களை இயக்கும் வாய்ப்பு எனக்கு எட்டாக்கனியாக அமைந்தது. இது நான் செய்த தவறு என்றும் என்னுடைய வளர்ச்சிக்கு நானே முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறேன் என்றும் லேட்டாகத்தான் உணர்ந்தேன். எனக்கு ஏற்பட்ட அந்த நிலையை இப்போதுள்ள இயக்குநர்களும், நாளைய இயக்குநர்களும் தவிர்க்க வேண்டுமெனில் குறிப்பிட்ட ஹீரோவை சார்ந்து படம் இயக்கும் நிலையை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள்.

கவித்துவமான படங்களைக் கொடுத்த மகேந்திரன் சாரிடம் சினிமா கற்றுக் கொண்ட நான், ‘யார்’ படத்தின் மூலம் பேன்டஸி டைரக்டராக அறியப்பட்டேன். பிறகு ‘நம்ம ஊரு நாயகன்’, ‘அன்புக் கட்டளை’ ஆகிய படங்கள் என்னை கமர்ஷியல் இயக்குநராக அடையாளப்படுத்தின. நாளடைவில் அந்த அடையாளத்தை தொடர முடியாத நிலையும் ஏற்பட்டது.

பிற்காலத்தில் எனக்கு அமானுஷ்ய கதைகள் மீது ஈர்ப்பு ஏற்பட காரணம் ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல்பெர்க். ஹாலிவுட் பாணியில் படம் இயக்க வேண்டும் என்கிற ஆவலில் அமானுஷ்ய விஷயங்களை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன். சித்தர்கள் வாழும் பொதிகை மலை, கொல்லி மலை உட்பட பல மலைப் பிர தேசங்களுக்கு ஆய்வுக்காக பயணித்தேன். அப்படி உருவாகிய ஸ்கிப்ரிட்தான் ‘ஜென்மம் எக்ஸ்’ டிவி. தொடர்.

டி.வி தொடர் இயக்குவதற்கு முன் நான் இயக்கிய படம் ‘மகுடிக்காரன்’. இந்தியில் வெளியான ‘தூத்கா கர்ஸ்’ என்கிற படத்தைத் தான் தமிழில் ரீ-மேக் செய்தோம். தயாரிப்பு நளினியின் தங்கை லக்ஷ்மி சுப்பையா. அதுவரை வில்லன் வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த சரத்குமார் இந்தப் படத்திலிருந்துதான் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். சரத்குமாருக்கு ஜோடி ‘இதயம்’ சித்ரா. படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் உட்பட அனைத்து வேலைகளும் முடிந்த அந்தப் படம் இன்றுவரை சில காரணங்களால் ரிலீஸாகவில்லை.

‘ஜென்மம் எக்ஸ்’ டி.வி தொடர் எனக்கு மிகப் பெரிய பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. உண்மையை சொல்வதாக இருந்தால் சினிமாவில் இருந்து சின்னத் திரைக்கு மாற வேண்டுமா... என்று ஆயிரம் முறையாவது யோசித்திருப்பேன். ஆனால் அந்த டி.வி தொடர்தான் எனக்கு மறு ஜென்மம் கொடுத்தது. டி.வி தொடரை இயக்குவதற்கு முன் சன் டி.வி.யில் ஒளி பரப்பான ‘ரகுவம்சம்’ சீரியல்தான் சின்னத்திரையில் என்னுடைய முதல் பிரவேசம்.

அந்த சீரியலில்தான் நான் முதன் முதலாக ஒரு நடிகனாக அரிதாரம் பூச ஆரம்பித்தேன். இந்த சமயத்தில் என்னுடைய நண்பர் ஈஸ்வருக்கு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். ஏனெனில் சின்னத்திரையில் நான் வேலை செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் வசதி குறைவில் இருந்தேன். அந்த நண்பர்தான் தினமும் என்னை வீட்டிலிருந்து லொகேஷனுக்கும், லொகேஷனிலிருந்து வீட்டுக்கும் அழைத்துச் செல்வார்.

ஒரு நாள் திடீரென்று அவர் என்னை அவசர அவசரமாக அழைத்துக் கொண்டு பிரபல கார் கம்பெனியின் ஷோரூமுக்குள் நுழைந்தார். அங்கு சென்றதும் என்னுடைய கையில் புத்தம் புதிய ஒரு கார் சாவியைக் கொடுத்து ‘இது உங்களுக்குத்தான்’ என்று சொல்லி என்னை திக்குமுக்காட வைத்துவிட்டார். 2004ம் வருடம் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத வருடமாக அமைந்தது...’’ என்று நிறுத்திய ‘யார்’ கண்ணன், அது என்ன என்பதை அடுத்த வாரம் தொடர்கிறார்.

- சுரேஷ்ராஜா
படங்கள்: ஆர்.சந்திரசேகர்