ஜெயிப்பாரா ஜெய் குஹேனி?



பரம்பரை பரம்பரையாக நீளமான கூந்தலுடன் வலம் வந்த குடும்பத்தில் பிறந்தவர் ஜெய் குஹேனி. அந்த பாரம்பரியத்தை தன் கூந்தலிலும் கண்டவர். மூன்றாவது படிக்கும்போது, அம்மா வேண்டிக் கொண்டதற்காக முதல்முறையாக மொட்டை போட்டார். பிறகு வேறொரு காரணத்துக்காக மீண்டும் ஒருமுறை மொட்டையடித்துக் கொண்டார். இதையடுத்து மற்றொரு வேண்டுதலுக்காக மூன்றாவது முறையாக மொட்டை போட்ட ஜெய்குஹேனி, அதற்குப் பிறகு உஷாராகி கூந்தல் வளர்க்க ஆரம்பித்தார்.



கடகடவென்று வளர்ந்தது. இப்போது 19 வயது ஆகிறது. உச்சந் தலையில் இருந்து கால் முட்டி வரைக்கும் அலைபுரளும் கூந்தலைப் பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட, பெரும்பாலான இளம் பெண்கள், ‘இவருக்கு மட்டும் இவ்வளவு நீளமான கூந்தல் எப்படி சாத்தியம்?’ என்று பொறாமையுடன் கேட்டனர். இப்படி பலரது கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்ட ஜெய் குஹேனி, இப்போது கூந்தலை ‘கட்’ பண்ணி விட்டார். புதிய ஹேர் ஸ்டைலுடன் வலம் வரும் அவரைப் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

‘‘தமிழில் நான் நடிச்ச ‘ஆரோகணம்’, ‘மெய்யழகி’ படங்கள் ரிலீசாகி இருக்கு. அடுத்து ‘சார்லஸ் ஷபீக் கார்த்திகா’ படத்துல நடிக்கிறேன். இது சஸ்பென்ஸ் த்ரில்லர். ரெண்டு படத்துக்கும், இதுக்கும் என் நடிப்புல நிறைய வித்தியாசம் இருக்கும். புது ஹேர் ஸ்டைலில் வருவேன். எல்லா படத்துலயும் ஒரேமாதிரி கெட்டப்புல நடிச்சா, ஆடியன்சுக்கு போரடிக்கும். அதுக்குதான் உடனே என்னை மாத்திக்கிட்டேன். இப்பவும் நான் அழகாத்தானே இருக்கேன்?’’ என்று ஒரு சின்னக் குழந்தையின் குதூகலத்துடன் கேட்கும் ஜெய்குஹேனி, எவ்வளவு கிளாமராகவும் நடிப்பார் என்று எதிர்பார்ப்பவர்கள் ஏமாந்து போவார்கள்.

‘‘எனக்கு பெர்பாமன்ஸ் ரோல் பண்ணணும்னுதான் ஆசை. சும்மா நாலு பாட்டுக்கு கிளாமரா டிரெஸ் போட்டுகிட்டு வந்து ஆடிட்டு போறதுல உடன்பாடில்லை’’ என்றவருக்கு டைரக்ஷன் ஆசை இருக்கிறது. சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பிலிம் டெக்னாலஜி கோர்ஸ் எடுத்து, டைரக்ஷன் இறுதி யாண்டு படிக்கிறார். ‘‘பொதுவா பெண்கள் டைரக்ஷன் துறைக்கு வந்தா, ஆணாதிக்கத்தை எதிர்க்கிற கதைகளை பண்ணுவாங்கன்னு ஒரு இமேஜ் இருக்கு. அதை சுக்குநூறா உடைக்கணும்னு ஒரு ஸ்கிரிப்ட் எழுதப் போறேன். கமர்ஷியல் ரூட்டுதான் என் சாய்ஸ்’’ என்ற ஜெய்குஹேனி, உடனே டைரக்ஷனில் குதிக்க மாட்டாராம்.

‘‘இளமை இருக்கிறப்பதான் ஹீரோயினா நடிக்க முடியும். எனக்கு ரொம்ப சின்ன வயசு. ஆளை பார்த்தா அப்படி தெரியாது. நெடு நெடுன்னு வளர்ந்துட்டேன். அதனாலதான், என் 11 வயசுல கமல் ஜோடியா ‘வேட்டையாடு விளையாடு’ படத்துல நடிக்க கேட்டாங்க. அப்ப நான் எந்த முடிவும் எடுக்கலை. ஸோ, இன்னும் சில வருஷம் நடிப்பில் கவனம் செலுத்திட்டு, அதுக்குப் பிறகு வாய்ப்பு குறைஞ்சா டைரக்ஷன் பக்கம் வரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்’’ என்ற ஜெய் குஹேனிக்கு தமிழ் சரளமாக வருகிறது. அதைவிட பரத நாட்டியம் அவரை பம்பரமாக சுழல வைக்கிறது.

- தேவராஜ்