இங்க காதல்னு சொல்லுது...



வி.செல்வா இயக்கத்தில் விடிவி.கணேஷும், சந்தானமும் இணைந்துள்ள படம் ‘இங்க என்ன சொல்லுது’. கணேஷுக்கு ஜோடி மீராஜாஸ்மின். இவர்களோடு சிம்பு, ஆண்ட்ரியா, பாண்டியராஜன், சொர்ணமால்யா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

‘‘இந்தப் படத்தின் நாயகன் கணேஷ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தைத்தான் சினிமாவாக எடுத்துள்ளோம். வேலைக்காக சிங்கப்பூர் செல்லும் நாயகனுக்கு காதல் பிறக்கிறது. காதலுக்குப் பிறகு நாயகனுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எந்தளவுக்கு சுவாரஸ்யமாக சொல்ல முடியுமோ அந்தளவுக்கு சுவாரஸ்யமாக சொல்லியுள்ளோம்.


தன்னுடைய நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்தான் கதை என்பதால் அல்வா சாப்பிடுவது போல் தன்னுடைய கேரக்டரை ஊதித் தள்ளியிருக்கிறார் கணேஷ். இதுவரை நகைச்சுவை நடிப்பும், கரகர குரலும்தான் கணேஷுக்கு அடையாளமாக இருந்துள்ளது. ஆனால், இந்தப் படத்தின் மூலமாக அவருக்கு இன்னொரு பரிமாணம் கிடைக்கும். அதுமட்டுமில்ல, இந்தப் படத்துக்குப் பிறகு ஒரு ஹீரோவாக பார்க்குமளவுக்கு வெளுத்து வாங்கியிருக்கிறார்.

மீரா ஜாஸ்மினைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். இந்தப் படம் தமிழில் அவர் விட்டுப்போன இடத்தை நிரப்பக் கூடியளவுக்கு இருக்கும். பெரிய ஹீரோக்களுடன் நடித்து வரும் அவர் இந்தப் படத்தில் எப்படி நடிக்க சம்மதித்திருப்பார் என்கிற கேள்வி அனைவருக்கும் எழும். கதைதான் இவரை இந்தப் படத்தில் நடிக்கவைத்தது. அந்தளவுக்கு மீராவுக்கு இதில் பிரமாதமான ரோல். ஒரே வார்த்தையில் சொல்வதாக இருந்தால் கதையின் ஜீவனே அவர்தான்.

இவர்கள் இருவருக்கும் அடுத்து படத்தில் முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் சந்தானம் வருகிறார். சிம்புவின் கேரக்டர் ஸ்டைலிஷாகவும் அதே சமயம் அனைவராலும் பேசக்கூடிய அளவுக்கும் இருக்கும். தரண்குமார் இசையமைத்திருக்கிறார். ‘குட்டிப்பயலே குட்டிப்பயலே...’ என்கிற பாடல் பட்டைய கிளப்பும்.

இது பயணத்தை பின்புலமாகக் கொண்ட கதை என்பதால் சிங்கப்பூர், லண்டன், சென்னை உட்பட ஏராளமான லொகேஷன்களில் படமாக்கினோம். யதார்த்தமான கதை என்பதால் இந்தக் கதைக்கு கேமரா வித்தைகள் தேவைப்படவில்லை. அந்தவகையில் என்னுடைய ஒர்க் கதைக்குள்தான் இருக்கும். எந்த இடத்திலும் கதையை மீறி கேமரா ஒர்க் இருக்காது...’’ என்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளரான ஆர்.டி.ராஜசேகர்.

- எஸ்