புது ஹீரோவை படாத பாடு படுத்திய நடிகை



‘காமராசு’, ‘அய்யாவழி’ படங்களுக்குப் பிறகு நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘நதிகள் நனைவதில்லை’. கன்னியாகுமரி மாவட்டம் தாடகைமலை கிராமத்தில் ஷூட்டிங். முழுப் படத்தையும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே ஷூட் பண்ணுவதால் அங்கே டீமோடு முகாமிட்டிருந்தார்.

 நாமும் அங்கு ஆஜராகியிருந்தோம். சுற்று முற்று கிராமம் முழுவதும் தாடகைமலையில் திரண்டிருந்தது. ஊர் திருவிழா ரேஞ்சுக்கு வண்டி கட்டி கிளம்பி வந்திருந்தார்கள். ‘‘இந்த படப்பிடிப்பு இங்கு ரொம்ப நாள் நடந்தாலும் இன்று குத்துப்பாட்டு எடுக்குறோம்னு தெரிஞ்சுகிட்டு இம்புட்டு கூட்டம் கூடியிருக்கு...’’ என்று நம் காதில் ஓதினார் உதவி இயக்குநர்.

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் குத்தாட்ட அழகி கல்யாணிக்கும் ஹீரோ பிரணவுக்கும் டான்ஸ் மூவ் மெண்டுகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பாவம் புது ஹீரோ தயக்கத்துடனேயே இருந்தார். நேராக கல்யாணியிடம் சென்ற மாஸ்டர், ‘‘பையன் புதுசு. நெர்வசா இருக்கான். டேக்குல நீதான் பார்த்துக்கணும். இது பிலிமுல பண்ற படம். டோண்ட் வேஸ்ட் பிலிம்’’ என்றார். ‘‘நீங்க மூவ்மெண்ட்சை சொல்லுங்க மாஸ்டர்... நான் பார்த்துக்குறேன்’’ என்றார் கல்யாணி. அப்புறம் டேக் போனது.

பிரணவின் கையைப் பிடித்து சுழன்று சுழன்று ஆடிய கல்யாணி அவரது உடம்பை பாம்பைப் போல சுற்றி, கன்னத்தில் முத்தமிட்டு, காதைக் கடித்து, அவரது காலுக்குக் கீழாக முதுகுக்கு வந்து, கையை எடுத்து தோளில் வைத்து, இறுக அணைத்து, இதழோடு இதழ் கோர்க்கப் போகும் நேரத்தில்... பதறிப்போன இயக்குநர் அன்பழகன் ‘‘கட் கட்’’ என்றார்.
மாஸ்டர், இயக்குநரை முறைத்தார்.

‘‘இது வரைக்கும் போதும் மாஸ்டர்’’ என்றார். சுற்றியிருந்த கூட்டம் ஜொள்ளு வடிய பார்த்துக் கொண்டிருந்தது. நிச்சயம் விடலைகள் இயக்குநரை தீட்டித் தீர்த்திருப்பார்கள். உடம்பெல்லாம் வியர்த்துப்போய் அக்கடா என்று உட்கார்ந்திருந்தார் ஹீரோ பிரணவ். டேக் ஓகே ஆன திருப்தியில் வந்து அமர்ந்த இயக்குநரிடம் பேசினோம். ‘அருவா ரத்தம்னு கரடு முரடா சினிமா போயிட்டிருக்குற காலத்துல ‘நதிகள் நனைவதில்லை’ன்னு பொயட்டிக்கா தலைப்பு வச்சிருக்கீங்களே?’ என்றால்,

‘‘இங்க நீங்க பார்த்த சீன் கரடு முரடா இல்லியா?’’ என்று சொல்லி சிரித்தவர் தொடர்ந்தார். ‘‘டைட்டில் மட்டுமில்ல, படத்தோட கதையும் கவிதை மாதிரி தான். ‘காதலிக்காதவர்களிடம்தான் காதல் பத்திரமாக இருக்கிறது’ என்ற ஒருவரி கவிதை தான் படத்தோட ஒன்லைன். காதல் ஒரு பக்கம், வேலையில்லா திண்டாட்டம் மறு பக்கம், பொருளாதார சிக்கல் இன்னொரு பக்கம்... இந்த மூன்றுடனும் போராடும் இளைஞர்களின் வலியை சொல்கிற படம். நிச்சயம் புதுசா இருக்கும்...’’ என்றார்.

‘கதைய கவிதையா சொல்றீங்க. ஆனா மோனிகா, ரிஷா, காயத்ரினு மூன்று ஹீரோயின்கள். கல்யாணியின் குத்துப்பாட்டு வேறு...’ என்றதும், ‘‘கேள்வி கேட்டு மடக்குறதுக்குன்னே சென்னையிலேருந்து வந்திருப்பீங்க போல. உணர்ச்சியில் காதலை அணுகுகிற பெண், உண்மையான அன்பில் காதலை அணுகுகிற பெண், பிராக்டிகலாக காதலை அணுகுகிற பெண்... இந்த மூன்று விதமான பெண்களைக் காட்டத் தான் மூன்று பேரும். மற்றபடி கல்யாணியின் குத்துப்பாட்டு சின்ன வியாபார சமரசம்’’ என்றார். ‘ஜாதி மல்லி பூ வச்சிக்க... மனசுல நீ என்ன வச்சிக்க...’ என்று மீண்டும் பாடல் ஒலிக்க பிரணவ் கல்யாணியிடம் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார்.

- மீரான்