பகவத் கீதையின் சிறப்பு



பகவத் கீதைக்கு ஆயிரக்கணக்கானவர்களால் அவ்வப்போது பலவிதமான மொழிகளில் உரைகள் எழுதப்பட்டுள்ளன. இது மூவாயிரத்தையும்  தாண்டுகிறது என்று ஒரு கணக்கெடுப்பு இயம்புகிறது.

மிக அதிகமான அளவில் உரைகள் எழுதப் பட்டுள்ள, சமஸ்கிருதத்தில் அமைந்துள்ள இந்த மூல நூலானது, ஆங்கிலம், ரஷ்யன், பிரெஞ்சு, லாடின், கிரீக், ஜெர்மன் போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மற்றும் நமது பெரும்பாலான இந்திய மொழிகளிலும் பெருவாரியாக மொழி பெயர்க்கப்பட்டு உரைகளும் எழுதப்பட்டுள்ளன.

இதையே நகைச்சுவையாக, கீதையைப்  படிப்பவர்களைவிட அதற்கு உரை எழுதியவர்கள் அதிகம் என்பர். சகல சாஸ்திரங்களின் சாரமாக மகாபாரதம் விளங்குகிறதென்றால் அந்த சாரத்தின் சுருக்கமே கீதையாகும். அந்த சாரத்திற்குத்தான் இத்தனை உரைகள். கீதைக்கு ஏகப்பட்ட அளவில் உரைகள் இருந்தபோதிலும், ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாச்சார்யர் போன்ற ஆசார்யர்களால், அவதார புருஷர்களால் எழுதி அருளப்பட்டுள்ள பாஷ்யங்கள் தான் தலைசிறந்தனவாகக் கருதி பொக்கிஷங்களாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இதுவல்லாமல் இந்த ஆசார்யர்களின் வழிவந்த சில ஞானிகளும், மகான்களும், இவர்களின் பாஷ்யங்களுக்கு ‘டீகை’ என்று சொல்லப்படும் உரைகளை எழுதியுள்ளார்கள். அவர்களுள் ஸ்ரீஜயதீர்த்தர், ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள், ஸ்ரீஆனந்தகிரி, ஸ்ரீரதர், ஸ்ரீவேங்கடநாதர், ஸ்ரீலஸ்ரீ பிரபுபாதா போன்றோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். இப்படி உரைகள் பல இருந்தாலும் பகவான் எப்படிப் பார்த்தனுக்குச் சாரதியானார் என்பதில் எல்லா உரைகளிலும் ஒரே கருத்துத்தான். ஆனால் எப்படி எடுத்துரைக்கப்பட்டது என்பதில்தான் வேறுபாடு இருக்கிறது. (நல்வழி காட்டும் ஸ்ரீமத் பகவத் கீதை, ஆசிரியர்: அம்மன் சத்தியநாதன், பக்: 240, ரூ. 150/- ஏஏபி அருள்மிகு அம்மன் பதிப்பகம்,  16/116,  ஜி.றி. கோயில் தெரு, திருமலா ஃப்ளாட்ஸ்,   திருவல்லிக்கேணி, சென்னை -600 005.
தொலைபேசி:  4266 3546, 4266 3545.)

அகத்தியரிடம் ஆசி பெற்ற அண்ணல்


தண்டக வனத்திலே இராமர் பத்து ஆண்டுகள் வசித்தார். நெருப்பு இருந்தால் பனி அணுகாது. இராமர் இருந்ததனால் அரக்கர்கள் கொடுமை அகன்றது. இராமர், “தம்பி இலட்சுமணா! ஜானகி! நம் வனவாசம் மிகவும் பயனுடையதாக ஆயிற்று. பசுவின் பொருட்டும், அந்தணர் பொருட்டும், எவன் தன் உயிரைத் தியாகம் புரிவானோ, அவன் மும்மூர்த்திகளும் வணங்கத் தக்கவனாகின்றான். பரம சாதுக்களாகிய இந்தத் தவ சீலர்களுக்கு உதவி செய்யும் பெரும் பாக்கியம் நமக்கு கிடைத்தது.  இது பெரும் புண்ணியம்” என்றார்.
இராமரைக் காண பல முனிவர்கள் வந்தார்கள். ஆனால், அகத்திய முனிவரைக் கண்டு வணங்க, இராமர் விரும்பினார்.

சுதீட்சினி முனிவர், அகத்திய முனிவரின் உறைவிடத்தைத் தெரிவிக்க, இராமர் அகத்திய ருடைய ஆசிரமத்தையடைந்தார் என்றுமுள தென் தமிழை உலகுக்குத் தந்த பெருந்தவ முனிவராகிய அகத்திய முனிவர், இராமரை வரவேற்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். ஆசியுரை கூறினார். நன்கு அவரை உபசரித்தார். சிவ கீதையை உபதேசித்தார். சிறந்த வில்லையும் உயர்ந்த கணைகளையும் தந்தார். இவை இராவண சம்மாரத்துக்குப் பயன்பட்டன.

அகத்தியருடைய அருளைப் பெற்று மூவரும் பஞ்சவடியை நோக்கிப் புறப்பட்டார்கள். (இராம காவியம், ஆசிரியர்: தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார், பக்: 366, ரூ. 82/- குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்,  132/107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை - 600 002. தொலைபேசி: 044-2845 7666.)

பாவனை, ஐக்கிய பாவனை

அத்வைதம் அளிக்கும் இந்த நிலைக்கு பிரம்ம பாவனை என்று பெயர். பிரம்ம ஞானிகள் பிரம்ம பாவனையில் தானும் பிரம்மனும் ஒன்று என்கிற உண்மையை சில நிமிடங்களில் உணர்ந்துகொண்டு மீண்டும் தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பவும் வந்து விடுகிறார்கள். பிரம்ம பாவனையில் பிரம்மத்துடனே இரண்டற கலந்து ஒன்றிணைந்துவிடும் நிலைக்கு ஐக்கிய பாவனை என்று பெயர்.

எப்படி நாடகத்தில் ராஜா வேடம் தரித்தவன் ஒரு மகாராஜாவைப்போல் அதிகாரம் செலுத்தி, நாடகம் முடிந்தபின் மீண்டும் தன்னுடைய சகஜ வாழ்க்கை நிலைக்கு திரும்பி வருகின்றானோ அதுபோல் பிரம்ம பாவனையில் அத்வைத அனுபவத்தை பெற்றுக் கொள்கிறார்கள். அமரகவி பத்து வயது பாலகனாக இருந்தபோதே பிரம்ம பாவனை ஐக்கிய பாவனை போன்ற அத்வைத அனுபவத்தை தம் வாழ்நாளில் அனுபவித்து வந்தார் என்பதை அவருடைய சரிதை படிப்பதன் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

எனவே ஈஸ்வரனுக்கு சமமாக அகத்தியர் விளங்கினாலும் அவர் என்றுமே அகத்தியர் என்ற பிரம்ம ரிஷிதான். அதுபோல்தான் மற்ற பிரம்ம ரிஷிகளான வசிஷ்டர், பிருகு, அத்திரி, சுகர், நாரதர், தும்புரு போன்றவர்களும். அப்படி இம்மகரிஷிகள் மீண்டும் தங்களுடைய சுய உணர்விற்கு திரும்பும் நிலைக்கு என்ன பெயர்? அது துவைத நிலை என்பதாகும். அதாவது, துவைதம் என்பது இரண்டு மாறுபட்ட அல்லது வேறுபட்ட நிலைகளை குறிப்பதாகும்.

ஜீவன் வேறு, பிரம்மன் வேறு. மீண்டும் அவை இரண்டும் (பிரம்மன், ஜீவன்) ஒன்றிணைய முடியாது என்பதே துவைத சித்தாந்தத்தின் கருத்தாகும். எனவே துவைத சித்தாந்தத்தின் கொள்கை என்பது உண்மையை உரைக்கும் நிலையாகும். (சாம்பவி யோகம், ஆசிரியர்: பிரபோதரன் சுகுமார், பக்: 224, ரூ. 120/- அயக்கிரிவா பதிப்பகம், 176 (108), பெரிய தெரு, திருவல்லிக்கேணி,  சென்னை -  600 005. தொலைபேசி: 2844 4275 அலைபேசி: 98409 17127.)

அன்றாடம் செய்ய வேண்டிய அனுஷ்டானங்கள்

விடியற்காலையில் எழுந்திருத்தல், எழுந்தி ருக்கும்போதே இஷ்ட தெய்வ நாமாவளிகளை உச்சரித்தல். மலஜலம் கழித்தல், தூய நீராடல், சனிக்கிழமைகளில் ஆணும், வெள்ளிக்கிழமைகளில் பெண்ணும் எண்ணெய் தேய்த்துக் குளித்தல். நீராடிய பின் தூய ஆடை உடுத்தி இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் ஒருவனின் உள்ளும் புறமும் தூய்மையாகிறது. மற்றும் உள்ளத் தூய்மைக்கு வாய்மை மிகவும் அவசியம்.

‘புறத்தூய்மை நீரால் அமையும், அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்’ - (குறள்)

நீரைப்பற்றி நினைக்கையில் ஊற்று நீர், ஏரி நீர், குளத்து நீர், ஆற்று நீர், கடல் நீர் ஆகியவை சிறப்பானவை.
ஆங்காங்கே தேவாலயங்களிலேயும் அவற்றிற்கு அருகிலேயும் புண்ணிய தீர்த்தங்களைக் காணலாம். மற்றும் காவிரி, கங்கை நீர் போன்றவை மிகச் சிறப்புடையதாம்.
‘கங்கையின் புனிதமாய காவிரி நடுவு பாட்டு

பொங்கும் நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கும்  தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் இருந்து வாழ்வேன்’

என்று ஆழ்வார் பாடுகிறார். எல்லா நதி நீர்களையும் கங்கை நீராகவே பாரத மக்கள் கருதுவது வழக்கம். நீராடு முன், நீராடுகையில், நீராடி முடித்தபின்  என்னென்ன செய்ய வேண்டும் என்று பல நியமங்கள் ஏற்பட்டுள்ளன.

நீராடுவதற்கும் சில மந்திரங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை உச்சரிக்க வேண்டும். சூரியனுக்கெதிரிலே நீராடி உள்ளங்கையில் நீர் ஏந்தி மந்திரம் உச்சரித்து அர்க்கியம் கொடுக்க வேண்டும். நீராடிய பின் மூதாதை யருக்கான தர்ப்பணங்கள் மந்திரங் களுடன் செய்ய வேண்டும். இதற்கென ஆங்காங்கு புனிதத் தீர்த்தங்களில் புரோகிதர்கள் உள்ளனர். அவர்களுக்கு உரிய தான தர்மங்களையும், தக்ஷிணைகளையும் கொடுக்க வேண்டும். (ஸ்ரீ அக்னி புராணம், ஆசிரியர்: கீழ்க்கோவளவேடு சி.நா. கிருஷ்ணமாச்சாரியார், பக்: 208, ரூ. 130/- ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32-ஙி, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், சென்னை - 600 017. தொலைபேசி: 044-24331510. 24336310.)

இந்தப் பகுதியில் இடம்பெற, பதிப்பாளர்கள் ஒரு பிரதி
அனுப்பினால் போதும்.   

முகவரி: ஆன்மிக அலமாரி,
ஆன்மிகம் பலன், 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004.