பிளாட்பாரக் கோயில்களில் வழிபடலாமா?



மற்றவற்றில் இல்லாத என்னென்ன சிறப்புகள் வேப்பிலைக்கு உண்டு?
- எஸ்.புவனா, சென்னை-94.
சாஸ்திரங்கள் துளசி, வேப்பிலை, வில்வம்

ஆகியவற்றை தெய்வீகமான இலைகளாக கூறியுள்ளன. அவை புனிதமானவை, சக்தியின் அம்சம் கொண்டவை எனவும் கூறப்பட்டுள்ளன. வீட்டு வாசலில் வேப்பமரம் வளர்ப்பதால் தீய சக்திகள் வீட்டினுள் நுழையாது. அம்மன் விரும்பி வேப்பிலை மாலையை சூடிக் கொள்கிறாள். வேப்ப மரக்காற்று பல நோய்களை அகற்றும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தோல் சுருங்காமல் உடலின் அழகை அதிகப்படுத்த வேப்பிலை, பூவரசு இலை, குப்பைமேனி, பச்சையான மருதாணி இலை, செம்பருத்தி இலை, துளசி, கறிவேப்பிலை இவற்றில் உங்களுக்கு கிடைப்பவற்றை எடுத்து உலர வைத்து தூளாக்கி கடலை மாவோடு சேர்த்து குளிக்கும்போது உபயோகிக்கலாம். சரும நோய் எல்லா
வற்றையும் போக்கவல்லது வேப்பிலை.

அமாவாசை, அஷ்டமி தினங்களில்
சுப நிகழ்ச்சிகளைத் தொடங்கக்
கூடாதா? அதனால் ஏதேனும் ஆபத்து
உண்டாகுமா?
 சரவணன், தஞ்சாவூர்.
அமாவாசை, பௌர்ணமி நாட்களைப் பூரண திதி என்பார்கள். இந்நாட்களில் சுப நிகழ்ச்சிகளை மேற்கொள்ளாதிருப்பது நல்லது. புது முயற்சிகள் எதையும் தொடங்கவும் வேண்டாம். அமாவாசையன்று முன்னோர்களுக்கான தர்ப்பணம் கொடுப்பதுதான் நல்லது. சுப நிகழ்ச்சி, முயற்சிகளை இந்நாட்களில் மேற்கொள்வதால் ஆபத்து நேரா விட்டாலும் ஏதேனும் தடையோ அல்லது தாமதமோ நேரிடலாம். என்னென்ன திதிகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம், விலக்கலாம் என்று இரண்டையுமே இந்து தர்மசாஸ்திரம், திதி நிர்ணய காண்டத்தில் தனியாக விளக்குகிறது. ஜோதிடம், அமாவாசை அல்லது பௌர்ணமி நாட்களில் ஜனனமாகும் குழந்தைகளுக்கு திதி சூன்ய தோஷம் கிடையாது என்கிறது. இந்த திதிகளில் பிறந்தவர்களுக்கு பன்னிரண்டு ராசிகளும் பலமாக இருக்கும். துவிதியை, சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, தசமி,

துவாதசி, சதுர்த்தசி நாட்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு திதி தோஷம் உண்டு. அந்தந்த திதிக்குரிய சாந்தி பரிகாரங்கள் உள்ளன. அவற்றை மேற்கொண்டால் திதி தோஷம் விலகும். திருவள்ளூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள் கோயில் திருக்குளத்திலும், கும்பகோணம், பூந்தோட்டத்திற்கு அருகேயுள்ள செதலபதி, மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள ஆறுபாதி போன்ற ஊர்களில் அமாவாசையன்று நீராடி நீத்தார் கடன்களை நிறைவேற்றுவது விசேஷமானதாகும்.

பித்ரு தோஷம் இருப்பதை ஜாதகம் மூலம் அறிய முடியுமா?
- யாழினிபர்வதம், சென்னை-78.ஜாதகத்தை பல வழிகளில் ஆராய்ந்துதான் பித்ரு தோஷத்தை சொல்ல முடியும். பித்ரு தோஷம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பித்ரு கர்மாவை சரியாகச் செய்ய

வேண்டும். ஒருவர் இறந்த பிறகு 13 நாட்களோ அல்லது அவரவர் சம்பிரதாயப்படியோ மேற்கொள்ளவேண்டிய கிரியைகளை தவறாமல் செய்ய வேண்டும். இறந்ததிலிருந்து அடுத்த ஒரு வருடத்திற்குள் என்னென்ன விஷயங்களை செய்யவேண்டுமென்று வேத சாஸ்திரங்கள் விதித்திருக்கிறதோ அதையெல்லாம் சரியாகச் செய்ய வேண்டும். அமாவாசை, மஹாளயம் மற்றும் புண்ணிய தினங்களில் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை விடாமல் செய்து முடிக்க வேண்டும். இதனால் முன்னோர்கள் சந்தோஷமடைந்து ஆசீர்வாதம் செய்கின்றனர். பித்ருக்களுக்கான கடனை நிறைவேற்றினால் தோஷம் ஏற்படாது.

இறைவனுக்கான அபிஷேகத்திற்கு பாக்கெட் பால் தருவது சரியா? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.நேரடியாக பசுவின் பாலை கறந்து எடுத்துக் கொண்டு வந்து அபிஷேகம் செய்வதுதான் சரியாகும். ஆசார சீலர்கள் பலர் பாக்கெட் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்ய மாட்டார்கள். எனவே, முடிந்தவரையில் கறந்த பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வதே நல்லதாகும். காய்ச்சிய பாலை இறைவனுக்கு நிவேதனம் செய்யலாமே தவிர அபிஷேகம் செய்யக் கூடாது.

ஆயுர்வேதம், பசும்பாலை அதிகம் உட்கொள்வதால் பல நோய்கள் நீங்குவதாகவும் கூறுகிறது. ஸ்ரீரமண மகரிஷி ஆஸ்ரமத்திலிருந்து ஸ்ரீசக்ரம் வாங்கி வந்துள்ளேன். அதன் சிறப்புகளை கூறுங்கள்.
- கே.ஆனந்தன், விராலிமலை. பல பிறப்புகளில் நீங்கள் அடைந்த புண்ணியமே ஸ்ரீசக்ரம் பூஜிக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு உதித்திருக்கிறது. ஆனாலும், தவறாக பூஜித்தால் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். ஏனெனில், இது சிங்கம் முகத்தில் முத்தமிடுவது போன்றதாகும்.

இருப்பினும் மிகப் பெரிய பொக்கிஷமாகக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைக் கொண்டு இதிலேயே உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவரின் ஆசியோடு மந்திரத்தைப் பெற்று, வீட்டின் ஈசான்யமான வடகிழக்கு மூலையில் ஒரு சிறு பெட்டிக்குள் வைத்து பூஜியுங்கள். பெண்களுக்கு நிறைய அழகு சாதனங்களை தானமாகக் கொடுங்கள். மனைவியை கண் கலங்காமல் பாதுகாத்தீர்களானால், அம்பிகையே உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்குவாள்.

பிளாட்பாரத்தில் கோயில் கட்டி வழிபாடு செய்வது சரியா? சிவன் கோயிலில் அமைக்கப்பட்ட 63 நாயன்மார்களும் மனிதர்களாக பிறந்தவர்கள்தானே! வழிபாட்டுக்கு உகந்தவர்களாக இவர்கள் எப்படி ஆனார்கள்?- ஸ்ரீதேவி, சென்னை-78.பிளாட்பாரத்தில் கோயில் அமைத்து வழிபாடு செய்யும்போது சுத்தம் கெடும். அருவறுப்பான பேச்சுக்கள், மனதை சிதற வைக்கும் ஒலிகள் ஆகியனவே அதிகம். எனவே, பிளாட்பாரத்தில் கோயில் களை அமைப்பது சரியல்ல. 

மனிதர்களும் தெய்வ சக்தி பெற்று இறைவனை அடைய முடியும் என்பதைத்தான் 63 நாயன்மார்களின் சரிதம் நமக்கு உணர்த்துகிறது. அருள் மிகுந்த கிருபானந்த வாரியாரைக்கூட 64வது நாயன்மாராக சிலர் பாவித்து வழிபடுவார்கள். சென்னை  - மயிலாப்பூர் கபாலி கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் திருவிழாவிற்கு வந்து
தரிசியுங்கள். அப்போது உங் களுக்கு அறுபத்து மூவரின் மகிமை புரியும்.

கண் திருஷ்டி என்பது ஒருவரை பாதிக்குமா? சூரிய நமஸ்காரம் செய்ய உகந்த நேரம் எது?
- சரவணன், கும்பகோணம். நவ கிரகங்களைப் போலவே மனிதர்களின் கண் பார்வையும் சக்தி படைத்தது. பார்வையைப் பொறுத்து அதன் பாதிப்பும் இருக்கும். அடுத்தவர் பொறாமைப்பட வேண்டும் என்கிற விதமாக எந்தவொரு காரியத்தையும் செய்யக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஏனெனில் கண் திருஷ்டி என்பதின் பின்னணியில் தீய எண்ணத்தின் கடுமை உள்ளது.
அதிகாலையில் வானத்தில் சிவப்பாக சூரியன் தோன்றும்போதே சூரிய நமஸ்காரத்தைத் தொடங்கி காலை 8 மணிக்குள் முடிப்பது சாலச் சிறந்ததாகும்.
சமஸ்கிருதத்தை தேவபாஷை என்கிறார்களே! அப்படி என்ன சிறப்பு அதில்?- சுரேஷ், கடலூர்.

‘சமஸ்’ என்றால் சமைக்கப்பட்ட என்று பொருள்; ‘க்ருதம்‘ என்றால் நல்ல முறையில் என்று பொருள். சமஸ்க்ருதம் என்றால் நன்கு சமைக்கப்பட்ட, செம்மைப்படுத்தப்பட்ட மொழி என்றே பொருள். வேதத்தின் மொழியே சமஸ்கிருதம்தான். தமிழகத்தைப் பொறுத்தவரை சமஸ்கிருதமும், தமிழும் ஆதியிலிருந்தே இருந்து வந்துள்ளன. உலகத்திலுள்ள எல்லா மொழிகளுக்கும் மூத்தது இதுதான். ஈசனின் மூச்சுக்காற்றே வேதமாக இருப்பதால், அதுவே ஈசனின் பாஷையாகவும் இருக்கிறது. எனவேதான் அதை ஆதிபாஷை, தேவ பாஷை என்கிறார்கள்.

 முக்கியமாக இந்த மொழியிலுள்ள உச்சரிப்புகள் உடலிலும், நாடிகளிலும் அதிர்வுகளை உண்டாக்கி மனதில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்து கின்றன. மந்திரங்களுக்கு அர்த்தம் கூட முக்கியமில்லை. அந்த உச்சரிப்பினாலேயே ஏற்படும் அதிர்வுகளே நல்ல மாற்றங்களை வாழ்வில் ஏற்படுத்தி விடும். எனவேதான் இந்த மொழியை சப்தப் பிரம்மம் என்பார்கள். கண்ணுக்குத் தெரியாத தேவர்கள் மந்திர சொரூபமாக உள்ளனர். அந்த மந்திரங்களை சொல்லும்போது அவர்களின் அனுக்கிரகம் நமக்குக் கிடைத்து விடுகிறது.

தெளிவுபடுத்துகிறார் சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ

என்.வைத்யநாத தீட்சிதர்