ஏப்ரல் மாத பிரசாதங்கள்



தேங்காய், மாங்காய் பச்சடி

என்னென்ன தேவை?
மாங்காய் - 1 துருவியது, தேங்காய் - அரை மூடி, சீரகம் - அரை டீஸ்பூன். உப்பு, எண்ணெய் - தேவைக்கு, பச்சை மிளகாய் - 2, தாளிப்பதற்கு - கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளிப்பில்லாத கெட்டி தயிர் - 1 கப்.

எப்படிச் செய்வது? 
மாங்காயைத் துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், சீரகம், தேங்காய் சேர்த்து அரைத்துக் கொண்டு துருவிய மாங்காய், கடைந்த தயிர், உப்பு, தேங்காய் விழுது சேர்த்து கலந்து தாளித்துக் கொட்டி பரிமாறவும். 

திராட்சை பாயசம்
(திராட்சை கீர்)

என்னென்ன தேவை?
கொட்டை இல்லாத திராட்சை - 25, நெய் - 2 டேபிள்ஸ்பூன், பாதாம் - 1 டேபிள் ஸ்பூன், முந்திரி - 1 டேபிள் ஸ்பூன், பால் - 2 கப், பச்சை அரிசி
அல்லது பாசுமதி அரிசி - 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - அரைகப் அல்லது தேவைக்கேற்ப, ஏலக்காய்தூள் - ஒரு சிட்டிகை, அலங்கரிக்க - கிஸ்மிஸ் (டிரை கிரேப்ஸ்) சிறிதளவு.
எப்படிச் செய்வது? 

அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து இத்துடன் சூடான நீரில் 15 நிமிடம் ஊற வைத்த பாதாம், முந்திரி பருப்பை சேர்த்து நைஸாக அரைக்கவும்.
பாலை நன்றாக கொதிக்க வைத்து அத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்து கை விடாமல் மிதமான தீயில் சில நிமிடங்கள் மாவு வேகும் வரை கிளறவும். இத்துடன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து பாயசம் பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். பின் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர செய்யவும்.
திராட்சையை பாதியாக வெட்டி ஒரு வாணலியில் நெய் விட்டு சிறிது நேரம் வதக்கவும். (அதிகம் குழையக்கூடாது). பின் இறக்கி வைக்கவும். இதே போல் காய்ந்த திராட்சையும் நெய்யில் வதக்கி வைத்துக் கொள்ளவும்.
குளிர்ந்த பாயசத்தின் மேல் வதக்கிய திராட்சை கொண்டு அலங்கரித்து பரிமாறவும். 

டிரை ப்ரூட்ஸ்,
நட்ஸ், கசகசா பர்ஃபி

என்னென்ன தேவை?
பாதாம், முந்திரி, திராட்சை, கொப்பரை தேங்காய் சீவல், பேரீச்சம் பழம் எல்லாம் சேர்த்து - 1 கப் (இவை எல்லாவற்றையும் சீவிக் கொள்ளவும். நெய் - 2 டேபிள் ஸ்பூன், கோவா - அரை கப், சர்க்கரை - தேவைக்கு, கசகசா - கால் கப் (வறுத்தது).
எப்படிச் செய்வது? 

சீவிய பாதாம், முந்திரி, பொடித்த திராட்சை, துருவிய கோவா, பொடித்த பேரீச்சம் பழம் இவையாவும் 1 கப் இருந்தால் சர்க்கரை அரைகப். கோவா இனிப்பாக இருந்தால் சர்க்கரை அளவைக் குறைக்கவும். இவை எல்லாவற்றையும் நெய் சேர்த்து கிளறி சுருண்டு வந்ததும் இறக்கி வைக்கவும். கசகசாவை வெறும் கடாயில் வறுத்து பாதி கசகசாவை கலவையில் சேர்க்கவும். பின் ஒரு டிரேயில் சிறிது நெய் தடவி
மீதி உள்ள கசகசாவை பரப்பவும். அதன் மேல் இந்த பழக் கலவையை சமமாக பரப்பி மீண்டும் சிறிது கசகசாவை அதன் மேல் தூவி, விருப்பப்பட்டால் சீவிய பாதாம் தூவி பரப்பி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்பு: 2 டீஸ்பூன் பால் பவுடர் சேர்த்து கோவா இல்லாமலும் இந்த பர்ஃபி செய்யலாம். சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து துண்டுகள் போடவும்.