ராமபிரான் ஆரம்பித்து வைத்த பண்டிகை



தேவிக்கு உரிய ஆஷாட நவராத்திரி ஆடியிலும், சாரதா நவராத்திரி புரட்டாசியிலும், மாதங்கி நவராத்திரி தை மாதத்திலும் வரும். இந்த ஆண்டு வசந்த  நவராத்திரி பங்குனி அமாவாசை திதி தினத்திற்கு அடுத்த தினம் 1.4.2014 அன்று தொடங்குகிறது.  ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, கானகத்தில் சீதையை தேடியலைந்த போது அகத்திய முனிவர் ராமனுக்கு லலிதாம்பிகையின் பெருமையையும், லலிதா ஸஹஸ்ரநாமத்தின் அருமையையும் எடுத்துரைத்து சித்திரை மாதத்தில் வசந்த காலத்தில் 9 நாட்கள் அம்பிகையை ஆராதிக்கும்படி அறிவுரை கூறினார். அதன்படி ராமபிரான் (தற்போதைய) தர்மபுரி கல்யாண காமாட்சி ஆலயத்தில் தேவியை வசந்த நவராத்திரி காலத்தில் ஆராதித்து ஸஹஸ்ரநாமங்களினால் அந்த லலிதையை அர்ச்சித்து, பிறகு  அனுமனை சந்தித்ததாக வரலாறு.

இன்றும் அத்திருத்தலத்தில் கருவறை மண்டபத்தில் ராமாயண சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளதை தரிசிக்கலாம். ராமபிரானாலேயே ஆரம்பித்து வைத்த பெருமை கொண்டது இந்த வசந்த நவராத்திரி. அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாம் அன்னை பராசக்தியை துதிக்கும் ஸௌந்தர்யலஹரி, ஆனந்தலஹரி, லலிதா த்ரிசதீ, லலிதா ஸஹஸ்ரநாமம், மூக பஞ்சசதீ போன்ற பல்வேறு துதிகளுள் தலையாயது லலிதா ஸஹஸ்ரநாமம். திருமீயச்சூர் லலிதாம்பிகையின் ஆணைப்படி வசின்யாதி வாக்தேவதைகள் தேவியைத் துதித்து
அவள் அருள்பெற்று இயற்றிய அதியற்புத துதி
லலிதா ஸஹஸ்ரநாமம். சீதையைக் காணாது
திகைத்து நின்ற ராமபிரானுக்கே வழி காட்டிய

அந்தப் பெருமைமிக்க லலிதா ஸஹஸ்ரநாமத்தின் மகிமைகளை அறிவோம். இந்த நாமாக்களின் அர்த்தங்களை அறிந்தவர்கள் பாக்கியசாலிகள். இதில் அடங்கியுள்ள
தத்துவங்களையுமறிந்து, ஞானபாவம் சிறந்தோங்க வாழ்வில் ஜீவன் முக்தர்களாகி சந்தேகத்திற்கிடமின்றி அத்தகையவர்கள் வாழ்கின்றனர் என்று உறுதியுடன் கூறலாம்.

இந்த திவ்ய ஸஹஸ்ரநாமத்தை தினசரி பாராயணம் செய்பவர்கள் தேவியின் அருளைப் பெற்றுக் களிக்கின்றனர் என்பது திண்ணம். சச்சிதானந்த வடிவினளாய், எங்கும் நிறைந்திருப்பவளாய்,
எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவளாய் விளங்கும் ஸர்வேஸ்வரியின் அருட்பிரசாதத்தை நமக்கு பெற்றுத் தரும் பெரும் சக்தி வாய்ந்தது இத்துதி. இந்த லலிதா ஸஹஸ்ரநாமம் 320 ஸ்லோகங்களைக் கொண்டது.  பூர்வபாகம், அதாவது, முதல் 50 ஸ்லோகங்களையும், ஸ்தோத்திரபாகம் (2ம் பாகம்) 182 ஸ்லோகங்களையும், பலஸ்ருதி (3ம் பாகம்) 87 ஸ்லோகங்களையும் கொண்டது.

தேவி சீக்கிரம் பலன் தருபவள். இதற்காக உடம்பை வருத்தி பூஜைகள் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆத்ம சுகத்திலேயே அவளை
ஆராதிக்கலாம். சுலபமாகவே அவளுடைய கிருபையைப் பெறலாம்.

அம்பிகைக்குப் பிடித்த திவ்ய நாமார்ச்சனையை மேற்கொள்வது எளிது. ‘பவானி’ எனும் 113ம் நாமம் முதல் ‘மஹாத்ரிபுரஸுந்தரீ’ எனும் 234ம் நாமம் வரையிலான இந்த 122 நாமாவளிகளையே தினசரி அர்ச்சனைக்கு தேவி பக்தர்கள் பயன்படுத்தி தேவியை அர்ச்சிக்கலாம். மகத்தான பலனையும் அடையலாம்.

1.4.2014 முதல் 9.4.2014வரை (நவமி திதி இந்த வருடம் 9ம் தேதி வரை நீடிப்பதால்) பக்தர்கள் லலிதா ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்து, அம்பிகையை ஆராதித்து வளங்கள் பெறலாம்.
8ம் தேதியன்று ஸ்ரீராமநவமி கொண்டாடப்பட்டாலும், 9ம் தேதி நவமி திதி முடிவடைவதால், இந்த வசந்த நவராத்திரி 9ம் தேதி அன்றே நிறைவடைகிறது.

எந்த ராமனால் இந்த வசந்த நவராத்திரி பூஜை ஆரம்பிக்கப்பட்டதோ அந்த ராமன் பிறந்த நவமியன்றே முடிவடையும் பெருமையையும் இந்த வசந்த நவராத்திரி பெறுகிறது. இந்த நவராத்திரியில் தேவியை ஆராதித்து தேவியின் பேரருளையும், ராமபிரானின் திருவருளையும் பெறுவோம்.

- ந.பரணிகுமார்