சகல நன்மைகளும் அருளும் சபரி துர்க்கா



கருணை புரிவதில் அம்பிகைக்கு நிகராக யாரைத்தான் சொல்ல முடியும்! கோர வேண்டிய அவசியமே இல்லாமல் தம் பக்தர்களுக்கு கருணையுடன் அருள் புரிவதால் அம்பிகையை ‘அவ்யாஜகருணா மூர்த்தின்யை நமஹ’ என லலிதா ஸஹஸ்ரநாமம் போற்றித் தொழுகிறது. தேவியின் அற்புத திருக்கோலங்களில் ஒன்றான வேடுவச்சி வடிவம் கொண்ட சபரி துர்க்கையின் பெருமைகளை அறிவோம். பாரதப் போரில் கௌரவர்களை வெல்ல ஈசனிடமிருந்து பாசுபதாஸ் திரத்தை பெறுவதற்காக அர்ஜுனன் கடுந்தவம் புரிந்தான்.

அவனது தவத்தில் மனமிரங்கிய ஈசன், கூடவே அவனது வீரத்தை சோதனை செய்யவும் திருவுளம் கொண்டார். மூகன் எனும் அசுரன் பன்றி வடிவமெடுத்து அர்ஜுனனின் தவத்தைக் கலைக்க முற்பட்டான். ஈசன் வேடுவனாக உருமாறி அந்த பன்றியை நோக்கி அம்பை எய்தார். அதே சமயத்தில் தன் தவம் கலைந்த அர்ஜுனன் அதற்குக் காரணமான பன்றியை நோக்கி அம்பை செலுத்தி னான். இருவருடைய அம்பு களும் ஒரே சமயத்தில் பன்றி யைத் தைக்க, பன்றி இறந்தது.

யாருடைய அம்பு பன்றியை மாய்த்தது என்பதில் ஈசனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே ஆரம்பித்த சொற்போர், இறுதியில் விற்போர் ஆக மாறியது. விற்போரில் வெல்பவரே பன்றியை முதலில் மாய்த்தவர் என்று கொள்ள வேண்டும் என்றார் வேடுவ வடிவில் இருந்த ஈசன். ஆனால், அந்த நிபந்த னையை அர்ஜுனன் ஏற்க வில்லை. இவ்வேடனுடன் விற்போர் புரிவது தன் கௌர வத்திற்கு இழுக்கு என எண்ணினான் அர்ஜுனன்.

ஈசன் அர்ஜுனனுக்கு திருவருள் புரிய தீர்மானித்த தால் மற்றொரு நிபந்த னையை விதித்தார். ‘நீ என்னுடன் போரிட மறுத்தால் உன் தோல்வியை ஒப்புக் கொள்’ என்றார். ஆனால் அப்படி பின்வாங்கி இழுக்கு தேடிக்கொள்ள விரும்பாத அர்ஜுனன், ஈசனுடன் விற்போருக்குத் தயாரானான். இந்தப் போரில் வென்றவரே பன்றியைக் கொன்றவர் என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டான்.
‘ஈசனுடன் விற்போர் புரிவதா? அர்ஜுனன் தாங்குவானா? ஈசன் அர்ஜுனனைக் கடுமையாகத் தாக்கிவிட்டால்?’ இவ்வாறு பல எண்ணங்கள் அம்பி கையின் சிந்தனையில் எழுந்தன. ஈசன் அர்ஜுன னுடன் போர் புரியும்போது தானும் அவருடன் இருக்க விரும்பினால் தேவி. உடனே வேடுவச்சி தோற்றம் கொண்டாள். தலையில் மயிற்பீலி, திருமார்பில் குந்துமணி மாலைகள், காதில் ஓலைச்சுருள் தாடங்கங்கள், கையில் அம்பு-வில் ஏந்தி மரவுரி தரித்து சபரி துர்க்கையாகத் தோன்றினாள்.

தகப்பன் கோபப்பட்டு பிள்ளையைக் கண்டிக்கும் போது, அவரது கோபம் எல்லை மீறாமலும், அதே சமயம் பிள்ளையின் தவற்றைக் கண்டிக்கும் தாய் போலவும் தேவி அர்ஜுனனைக் காக்க முன்வந்தாள். தன் முழு பலத்தையும் பிரயோகித்து அர்ஜுனன் போரிட்டாலும் ஈசன் தேவியின் வேண்டுகோளை ஏற்று அவனுடன் விளையாட்டாகவே போரிட்டார். தன்னுடைய கடுமையான தாக்குதலை விளையாட்டாகத் தடுத்துப் போரிடும் வேடனையே தன்னால் சமாளிக்க முடியவில்லையே, பெரும் எண்ணிக்கையிலான கௌரவ சேனைகளை எப்படி வெற்றி கொள்வது என கலங்கி நின்ற அர்ஜுனனை ஈசன் கையைப் பிடித்து உயரே தூக்கிப் போட்டார். அர்ஜுனனின் நாடி நரம்புகள் அனைத்தும் தளர்ந்தன.

தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தலைகுனிந் தான் அர்ஜுனன். தன் வில்வித்தை மீதிருந்த அவன் அகந்தை அழிந்தது. உடனே,  தன் சுய ரூபத்தை அர்ஜுனனுக்குக் காட்டினான் ஈசன். பின் பாசு பதாஸ்திரத்தை வழங்கியருளினான். இந்தப் பெருமைகள் யாவும் தேவியின் வடிவமான சபரி துர்க்கையையே சாரும். அம்பிகை மட்டும் சபரி துர்க்கையாக ஈசனுடன் எழுந்தருளியி ருக்காவிடில் மன்மதனின் கதியைத் தான் அர்ஜுனன் அடைந்திருப்பான். தேவியின் கருணையே  அர்ஜுன னைக் காத்தது.

இந்த சபரி துர்க்கை மிகவும் எளிமையானவள். அனைவருக்கும் தாயாக அருள்பவள். தன் பக்தர்களுக்கு ஞானத்தை அருள்பவள். வனத்தில் வசிப்பவள். பஞ்சபூதங்களால் மானிடர்க்கு வரும் இடர்களைக் களைபவள். பக்தர்களின் பாவங்களைப் போக்கி மீண்டும் அவர்கள் பாவக்குழியில் விழாமல் தடுத்தருள்பவள். பஞ்சபூதங்களும் இவளுள் அடக்கம். நவராத்திரியின் ஐந்தாம் நாளான பஞ்சமி திதி இத்தேவிக்குரியது.  இத்தேவிக்கு கொய்யா, நாகப்பழம், நேந்த்ரம்பழம், பேரிக்காய், ஆள்வள்ளிக் கிழங்கு முதலான கிழங்கு வகைகள், புட்டரிசி போன்றவற்றை நிவேதிக்கலாம்.

தேவியின் முகம் ஒரு தடாகம் போல் விளங்குகிறது. அந்த தடாகத்தின் வெண்தாமரை தேவியின் திருமுகம் ஆகிறது. அதை மொய்க்கும் வண்டுகள் போன்று இரு கண்கள். புருவங்கள் அலைகளாகின்றன. அந்த பேரழகுப் பெட்டகமான சபரி துர்க்கை நம் கவலைகளைப் போக்கட்டும். ‘ஸர்வ மங்கள மாங்கல்யே ஸிவே ஸர்வார்த்த ஸாதிகே’ என தேவி மஹாத்மியம் இவளைப் புகழ்கிறது. ‘பக்த ஸௌபாக்யதாயினி’ - பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் அருள்பவள் என லலிதா ஸஹஸ்ரநாமமும் இவளைப் போற்றுகிறது. 

தேவியின் புன்சிரிப்பும் தாமரை மலரைப் போன்றதே. தாமரை கொஞ்சமாக மெதுவாக மலர்வது ஒரு அழகு. அம்பிகையின் புன்னகை இப்படிக் கொஞ்சமாக மலர்ந்து தன் அழகை காட்டுகிறது. தாமரையில் மகரந்தத் துகள்கள் போல் தேவியின் முகத் தாமரையில் பற்கள் ஒளி வீசுகின்றன. தாமரையின் தேனை உண்ண வரும் வண்டுகள் போல் பரமேஸ்வரனின் கண்கள் தேவியின் திருமுகத்தின் மீது சஞ்சரிக்கின்றன.

எந்த கண்கள் மன்மதனை எரித்து அவனை வென்றதோ அதே கண்கள் கருவண்டுகளாகி தேவியின் முகத்தாமரையின் எழிலைப் பருகி இன்று அவளிடம் தோற்கின்றன. தேவியின் முகத்தாமரையில் புரளும் முன்னுச்சி கேசத்தைப் பார்த்தால் குட்டி வண்டினங்கள் கூட்டமாக வந்து தேனைப் பருகுவது போலத் தோன்றுகிறது. தாமரை மலர் திருமகள் நித்யவாசம் செய்யும் இடம். இவ்வாறு தேவியின் முகத் தாமரையை தியானம் செய்வதால் நிறைந்த லக்ஷ்மி கடாக்ஷம், சம்பத்துகள் விருத்தியாகும் என்பதில் சந்தேகமே இல்லை. இக்கூற்றை ‘மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேஸ மானஸா’ எனும் லலிதா ஸஹஸ்ரநாமத்தின் 28ம் நாமமும் உறுதி செய்கிறது.

தேவியின் கண்களில் நவரஸங்களும் அடக்கம். தேவி ச்ருங்காரப் பிரதமான தேவதை. ஆனால், பீபத்ஸம் எனும் வெறுப்பும் கொண்டது! பரமேஸ்வரனைத் தவிர பிறர் குழந்தைகளாக இல்லாமல் வேறு மனோபாவப்படி வந்தால் அம்பிகையின் கண்கள் அவர்கள் மீது வெறுப்பை உமிழும். அடுத்து ரௌத்ரம் எனும் கோபம். ஈசன் கங்கையை சிரசில் தரித்த செய்தி அறிந்தவுடன் தேவிக்கு கங்கையிடம் அளவு கடந்த கோபம்.

அவள் கண்கள் கோபத்தை கங்கை மீது பொழிந்தன. அடுத்து அற்புதம் எனும் அதிசயம். ஈசன் மதுரையில் நடத்திய 64 திருவிளையாடல், காலசம்ஹார லீலைகளைக் கேட்கும் போதெல்லாம் தேவியின் நயனங்கள் அதிசயத்தால் மேலும் விரிந்து அழகுற ஜொலிக்குமாம். சகல மனிதர்களுள்ளும் குண்டலினீ எனும் பாம்பின் வடிவில் உறையும் அம்பிகை ஈசனின் திருவுடலில் நெளிந்தாடும் நாகங்களைக் கண்டு பீதம் எனும் பய உணர்ச்சியை தன் கண்களில் காட்டுவாளாம்.

அடுத்து வீரம். அசுரர்களை ஜெயிக்கும்போது, செந்தாமரையின் அழகைப் பழிக்கும் தேவியின் நயனங்கள் வீர ரஸம் காட்டும். தன் தோழிகளான யோகினிகளுடன் தேவி ஹாஸ்யமாக பேசி சிரித்து பழகும்போது அவள் திருக்கண்கள் ஹாஸ்ய ரஸம் காட்டும். அடுத்தது முக்கியமான, கருணாரஸம். தன்னை அடிபணிந்து ‘தாயே உன் திருஷ்டி என் விஷயத்தில் கருணை நிறைந்ததாக இருக்கட்டும்’ என்று பிரார்த்திக்கும் ஒவ்வொரு அடியவர்க்கும் அனுக்ரஹம் செய்யும்போது தேவியின் நயனங்கள் கருணைமழை பொழியும். இந்த எட்டு ரஸங்களையும் உள்ளடக்கிய நிலையே தேவியின் சாந்த ரஸமான கண்கள்.

இவ்வாறு தேவியின் நவரஸ பாவங்களையும் த்யானிப்பவர்களுக்கு நவகிரகங்களின் அனுக்ரஹம் உண்டாகும். சகல சித்திகளும் கிட்டும். நம்மைப் போன்ற பாமர மக்களுக்கு வேண்டியதெல்லாம் அவள் கமல நயனத்தின் கசிந்தொழுகும் கருணைப் பார்வை ஒன்றே! சபரி மலையை தன் அருட்பார்வையால் புனிதமாக வைத்திருக்கும் அம்பிகை இந்த சபரி துர்க்கை. முனிவர்களையும், தபஸ்விகளையும், யோகிகளையும் தன் கருணையால் வசப்படுத்துபவள்.

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலையும், நினைவாற்றலையும் அருளும் அன்னை இவள். தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் பிறவித் துன்பத்தை உடனே நாசம் செய்து முக்தியளிக்க வல்லவள். தேவாஸுர யுத்த காலங்களில் துர்க்கையாகவும், மஹிஷாஸுரமர்த்தினியாகவும் தோற்றமெடுத்து தேவர்களை அசுரர்களிடமிருந்து விடுவித்ததோடு, பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திராதியரையே காப்பாற்றிய பெருமையும் கொண்ட தேவி இவள்.

தேவியின் இரண்டு பாதங்கள் மன்மதனின் அம்பராத் தூணி களாக விளங்குகின்றன. அதன் பத்து நகங்களும் முழங்காலுக்கும் கீழ் பாகத்திலுள்ள அம்பராத் தூணியில் வைத்திருக்கிற பத்து பாணங்களின் மேல் பாகத்தில் உள்ள கூர் கூம்புகள் போலத் தோற்றமளிக்கிறது. அம்பிகையின் பாதங்களை தேவ தேவியர் அடிக்கடி வணங்கும்போது அவர்கள் தரித்துள்ள நவரத்ன கிரீடங்கள் நக நுனிகளில் பட, அந்த கூர் பாகங்கள் சாணை தீட்டப்பட்டது போல் பளபளப்பாக விளங்குகின்றன.

மன்மதன் பஞ்ச பாணங்களை உடையவன். தேவி தன் கருணையால் தன் இருகால் நகங்களாகிய பத்து பாணங்களை மன்மதனுக்குத் தந்தது போலவும் கொள்ளலாம். எப்படியோ மன்மதன் ஈசனை வெல்ல தேவியின் திருவடித் திருவருள் உதவியது. அதே தேவியின் திருவடித் திருவருள் நம்மை காம, கோப, மோஹ, லோப, மத, மாச்சர்யங்களிலிருந்து அனவரதமும் காக்கட்டும்.
திருமூலர் தன் திருமந்திரத்தில் (1053)
அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்றில்லை
அவளன்றி ஊர்புகு மாற்றறியானே

-என்கிறார். அதாவது, தேவியை அறியா எந்த தேவதையும் இல்லை. அவளறியாமல் எந்தத் தவமும் இல்லை. அவளே பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேசுவரன், ஸதாசிவன் ஆகிய ஐவரையும் செயல்படுத்துகிறாள். அவள் துணையன்றி வீடு பேற்றை அடைய முடியாது.
திருமந்திரம் 1087,

காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலப்பல பொன்போலத் தோன்றிடும்
பேணும் சிவமும் பிரமனும் மாயனுங்
காணும் தலைவி நற்காரணி காணே

-என்கிறது. அதாவது, பொன்னால் செய்த அணிகள் பல வடிவங்களில் தோற்றமளித்தாலும் அவை யாவும் பொன்னின் தோற்றமே. அவற்றின் மூலப் பொருள் பொன் என்பது போல பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று பல தோற்றங்களிலும் தேவியே பக்தர்களைக் காக்கிறாள் என்பதாகும். சபரி துர்க்கையாக அர்ஜுனனைக் காத்த தேவியை பூஜித்து தியானித்து நலன்கள் பல அடைவோம்.

சபரி துர்க்கா த்யானம்
குஞ்ஜாபலா கல்பித ஹாரரம்யாம்
சுருத்யோ: சிகண்டம் சிகிநோ வஹந்தீம்
கோதண்ட பாணௌ தததீம் கராப்யாம்
கடிஸ்த வல்காம் சபரீம் ஸ்மராமி.
சந்த்ர கண்டா

முக்கண்களைக் கொண்ட இந்த தேவியை வணங்கினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். சந்திரகாந்தக்கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் கிரகித்து நீரைப் பொழிகின்றதோ, அப்படியே இத் தேவியும் நம் வெம்மையைத் தான் வாங்கிக்கொண்டு குளுமை யான கருணை நீரை நம்மீது பொழி கிறாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கிறது. நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித் துத் தன் கருணை மழையால் நம்மைக் குளிர்விப்பவள் இவளே. முக்கண்ணனின் மனைவியான இத்தேவியும் முக்கண்களைக் கொண்டு ஈசனைப் போலவே தலையில் பிறைச்சந்திரனைச் சூடி அருட்கோலம் காட்டுகிறாள்.

நாம் செய்யும் தீவினைகள் ஆகிய அசுரர்களைத் தடுக்கக் கையில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியருள்கிறாள். இத்தேவியை வழிபட ராகு கிரகத்தினால் ஏற்படும் பாதிப்பு நீங்கும். செவ்வாய்க்கிழமைகளில் இவளை துதித்திட துன்பம், தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம். திருவாலங்காட்டில் காளியை நாட்டியப் போட்டியில் வெல்ல ஈசன் ஆடியது ஊர்த்துவ தாண்டவம். ஒரு காலைத் தரையில் ஊன்றி மறு காலைத் தோளுக்கும் மேலே உயர்த்தி ஈசன் ஆடிய அந்த ஆட்டத்தில் இருந்து தோன்றிய தேவியே சந்த்ரகண்டா.

இத்தேவி தங்க நிறம் கொண்டவள். முக்கண்ணி. பத்து திருக்கரங்களில் பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருத்திருக்கிறாள். சிங்கத்தின் மீது ஆரோகணித்து போருக்குப் புறப்படும் பாவனையில் வீர மூர்த்தியாய் காட்சியளிப்பவள். இவளின் கண்டா எனும் மணியின் சத்தத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே சகல எதிரிகளும், அரக்கர்களும் அழிந்து போவர்.

இவள் திருக்கழுத்தில் அர்த்த சந்திர வடிவில் ஓர் மணி எப்போதும் தென்படுவதால் இத்தேவி சந்த்ரகண்டா என வணங்கப்படுகிறாள். இவள் பாதங்களைப் பற்றிய அப்பழுக்கற்ற பக்தர்களும் அந்த மணியின் நாதத்தை அனுபவித்து மகிழலாம். இத்தேவியை மணிபூரக சக்கரத்தில் இருத்தி ஆராதிக்க அதனால் பெறும் பயன்கள் அளவிடமுடியாதது.

சபரிதுர்க்கா ஓவியம்: ஸி.ஏ.ராமச்சந்திரன்

ந. பரணிகுமார்