கண்ணன் ஏன் வெண்ணெய் திருடினான்?



ஊத்துக்காடு, ஊத்துக்குளி -இந்த இரு ஊர்களுக்கும் பெயர் பொருத்தம்
தவிர, இன்னொரு பொதுப் புள்ளியும் உண்டு: வெண்ணெய்!

ஊத்துக்குளியில் வெண்ணெய் ஃபேமஸ். இன்னொரு பக்கம் ஆயர்ப்பாடியில் வெண்ணெயை அள்ளி அள்ளி உண்ட கண்ணனை விதவிதமாகக் ‘கிருஷ்ண கானம்’ பாடிய வேங்கட சுப்பையரின் ஊர், ஊத்துக்காடு. ‘அலைபாயுதே’, ‘குழலூதி மன மெல்லாம்’,  ‘பால் வடியும் முகம்’ என்று ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் ஏராளமான பாடல்கள் கர்நாடக இசை மேடைகளிலும், மக்களிடையேயும் நன்கு பிரபலமானவை. வெண்ணெய் உண்ணும் கண்ணனின் அழகை, குறும்பை அவர் பலவிதமாகப் பதிவு செய்துள்ளார்.

அதில் கொஞ்சம் நாமும் அள்ளி உண்போமா?
ஓர் ஆயர் குலப் பெண். அவளுக்குக் கண்ணன்  மேல் அன்பு. ஆனால், அவனோ எந்நேரமும் வெண்ணெயைத் தின்றுகொண்டிருக்கிறான்.இதனால் அந்தப் பெண்ணுக்கு வெண்ணெய் மேல் கோபம் வந்துவிடுகிறது. இப்படிப் பாடுகிறாள்:
பாரோடு விண்ணாகப் பரந்திருந்தானே,
பச்சைப்பிள்ளைத்தனம் போகவில்லையே!

மிச்சம் மீதிஇல்லாது வெண்ணெய்களவாடுவான்,
அலைந்து வெண்ணெய் திருட, அதில் என்ன இருக்கோ!
இந்தக் கண்ணன் வாமனனாகப் பிறந்தபோது, பூமியையும் வானத்தையும் அளக்கும் அளவுக்கு பெரிதாக வளர்ந்தான். ஆனால், என்ன
பிரயோஜனம்? மனத்தில் இன்னும் சின்னக் குழந்தையாகதானே  இருக்கிறான்! பின்னே?
ஊரில் யாருக்கும் ஒரு துளி வெண்ணெயை விட்டு

வைக்காமல் களவாடிவிடுகிறான். அப்படி அலைந்து திரிந்து திருடித் தின்னும் அளவுக்கு அந்த வெண்ணெயில் அப்படி என்னதான் ருசி?
இன்னொரு பெண்ணுக்கு, கண்ணனை எல்லாரும் ‘கள்ளன்’ என்று சொல்கிறார்களே என்று கவலை. அவனை ஏன் இப்படிக் கண்டபடி பேசுகிறார் கள் என்று வருந்துகிறாள்:
கை கொள்ளும் வெண்ணெய்உண்ட கருணையினை மனமார
கள்ளம், கள்ளம், கள்ளம் என்றோமே!

கை கொண்ட வெண்ணெய் அது உண்டதன்றி
கள்ளமே அறியாதகண்ணனை,
கண்டபடி சொல்லப்போகாதே!

அவன் அப்படி என்ன தவறு செய்துவிட்டான்? ஒரே ஒரு கை வெண்ணெய் அள்ளித் தின்றான், அவ்வளவுதானே? எல்லாக் குழந்தைகளும்தான் சொல்லாமல் எடுத்துத் தின்கிறார்கள். அது ஒரு பிழையா? அதற்காகக் ‘கள்ளம், கள்ளம், கள்ளம்’ என்று திரும்பத் திரும்பச் சொல்வதா? அந்தக் கருணை வழியும் முகத்தைப் பாருங்கள், கண்ணனுக்குக் கள்ளமே தெரியாது, அவனைக் கண்டபடி பேசாதீர்கள்!

அடுத்தவள், ‘அவன் தயிரையும் வெண் ணெயையும் களவாடினான் என்கிறீர்கள், ஆனால், அதைவிடப் பெரிய களவு ஒன்றை அவன் செய்திருக் கிறான், தெரியுமா?’ என்று குற்றம் சாட்டுகிறாள்.அப்படி என்ன தவறு?
தயிரொடு நவனீதம் களவிட
வந்ததுவும் போனதுவும் இமைப்பொழுது, ஆனாலும்
மனம் அன்றோ களவானதே!

இமைப்பொழுதில் வந்து தயிர், வெண்ணெயைக் கவர்ந்துகொண்டு அவன் ஓடிவிட்டான். ஆனால், அந்தச் சிறு நேரத்துக்குள் என் மனத்தையும் திருடிவிட்டான்!
இன்னொருத்தி, ‘நான் வெண்ணெயாக மாறக் கூடாதா?’ என்று ஏங்குகிறாள். ‘இல்லாவிட்டால், நான் புல்லாங்குழலாக மாறிவிடவேண்டும், அல்லது, பாம்பின் படமாக மாறவேண்டும்.’அவளுக்கு ஏன் அப்படிப்பட்ட ஆசைகள்?

‘‘நான் வெண்ணெயாகிவிட்டால், பசிக்கும் போதெல்லாம் கண்ணன் என்னை அள்ளிச் சாப்பிடுவானே! நான் புல்லாங்குழலாகிவிட்டால், அவன் பாடும் போதெல்லாம் என்னை வாசிப்பானே, நான் பாம்பின் படமாகிவிட்டால், அவன் என்மீது நடனமாடுவானே!’’
பாடஎண்ணி என் மனம் குழல் என்று ஆகும்,
பசிக்கு வெண்ணெய்என ஆனாலும் ஆகும்,
ஆடஎண்ணி என் மனம் அரவு படம் ஆகும்!

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது, கண்ணன் ஒரு வீட்டினுள் நுழைகிறான். அங்கிருந்த பெண்ணிடம் ‘எனக்கு சாப்பிட வெண்ணெய் வேணும்!’ என்று கேட்கிறான்.
‘கொஞ்சம் பொறு கண்ணா, இப்போதுதான்
வெண்ணெய்கடைந்து கொண்டிருக்கிறேன்!’
என்கிறாள் அவள்.

‘ம்ஹூம், எனக்கு இப்பவே வெண்ணெய் வேணும்’ என்றுபிடிவாதம் பிடிக்கிறான் கண்ணன்.
அந்தப் பெண் செல்லக் கோபத்தோடு பாடுகிறாள்:
ஆக்கப் பொறுத்தவர்க்கு
ஆறப் பொறுக்காமல்

அவசரப்படலாமோ? இது தகுமோ?
பாக்கியவதி தேவகி தரும் பாலா,
பண் ஆர்ந்த குழல் ஊதும் பால கோபாலா!

கண்ணன் இதற்கெல்லாம் அசருவானா? ‘வெண்ணெய் தாருங்கள்’ என்று மறுபடி கேட்கிறான். ‘இப்படி வம்பு செய்தால் வெண்ணெய் வந்து விடுமா?’ என்று கேட்டு சிரிக்கிறாள் அவள்.
மத்துப் புரி அணைந்து வாங்கிக்             கடையுமுன்னே
வம்பு செய்தால் வெண்ணெய்வந்திடுமோ?

பண் ஆர்ந்த குழல் ஊதும் கண்ணன் உன்     பெயர் சொன்னால்
வெண்ணெய்என்னதானாய்த் திரண்டிடுமோ?
கத்தும் கறவைக்கு எத்தனை சொன்னாலும்
கட்டி வெண்ணெயாய்க் கறந்திடுமோ?

‘‘கண்ணா, கொஞ்சம் பொறு, மத்தை வைத்துக் கடைந்து வெண்ணெய் எடுக்கும் வரை காத்திரு, அதற்கு முன்னால் வம்பு செய்தால் வெண்ணெய் தானே வந்துவிடுமா? நீ நல்ல கீதங்களைக் குழலால் வாசிக்கிறாய். உண்மைதான். அதற்காக, உன் பெயரைச் சொன்னதும் வெண்ணெய்தானாகத் திரண்டுவிடுமா? அல்லது, கறவை மாடுகளிடம் சென்று உன் பெயரைச் சொன்னால் அவை பாலுக்குப் பதிலாக வெண்ணெய்க் கட்டிகளையே கறந்துவிடுமா?’’

கண்ணனுக்குக் காத்திருக்கப் பொறுமை இல்லை. இன்னொரு பெண்ணிடம் ஓடுகிறான். ‘வெண்ணெய் வேண்டும்’ கேட்கிறான்.அவள் கொஞ்சம் வெண்ணெய் எடுத்துத் தருகிறாள். ‘இது போதாது, இன்னும் வேண்டும்!’ என்கிறான். அவள் சிரித்தபடி பாடுகிறாள்:
கண்ணல்லவோ ஸ்வாமீ, கார்மேனிக் கட்டழகா!
சின்னக் கையளவு வெண்ணெய்தந்தால் மெய்யவும் போதாது என்று
பையப் பையவாதாடுகிறாய், அய்யய்யய்யய்ய அய்ய!

‘‘கார்முகில் போன்ற மேனி கொண்ட கட்டழகா, நீ என் கண்ணல்லவா? ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாய்?உன்னுடையசிறிய கை நிறைய வெண்ணெய் தந்திருக்கிறேன். அது போதாது என்று வாதாடுகிறாய். இது சரியா?’’
அப்படியானால் கண்ணனுக்கு எவ்வளவு வெண்ணெய்தான் வேண்டும்?
அதை இன்னொரு பெண் சொல்கிறாள். வேறொரு பாடலில்:
முந்தாநாள் அந்தி நேரத்தில் செந்தமுதன் கிட்டே வந்து

விந்தைகள் பலவும் செய்து விளையாடினான்,
‘பந்து அளவாகிலும் வெண்ணெய்தந்தால் விடுவேன்’ என்று முந்துகிலைத் தொட்டு
இழுத்துப் போராடினான்!

‘‘கண்ணன் அவளுடைய சேலையைப் பிடித்துக் கொண்டு விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கி றானாம். ‘பந்து அளவு வெண்ணெய் தந்தால் தான் விடுவேன்’ என்கிறானாம்!
சிறிது நேரம் கழித்து, அடுத்த வீட்டில் சத்தம் கேட்கிறது. கண்ணன் வெண்ணெயைக் களவாடும் அழகைர சித்து ஒரு பெண் பாடுகிறாள்:
காணீரே! கஞ்சமலர்க் கண்ணன் வந்து நின்றதுவும்,
கை வெண்ணெயைத் தின்றதுவும்...

தொங்கும் உறிமேலே
துப்புக் கண்டுகொண்டான், யாரோ சொல்லிவைத்தாற்போலே!
நாணிக் கோணிநின்ற ஒரு நங்கைஅவள் மேலே
நல்லமணம் கமழ் பதம் கொண்டு ஏறி
மெல்லஉரியாடி, களவாடி...

ஆனாலும், ‘‘வெண்ணெய் வெண்ணெய் வெண்ணெய்’’ என்றான் கண்ணன். இவனுக்கு அப்படித்தான் வெண்ணெய் என்ன சுவையோ! பெண்களே, இங்கே வந்து பாருங்கள், தாமரைமலர் போன்ற இந்தக் கண்ணன் வருவதையும், கை நிறைய வெண்ணெயை அள்ளித் தின்பதையும் பாருங்கள்! இவன் அந்த வெண்ணெயை எப்படித் திருடினான் தெரியுமா?

உரிமேல் வெண்ணெய் இருப்பதை இவனுக்கு யார் சொன்னார்களோ, எப்படியோ அதைத் தெரிந்து கொண்டுவிட்டான். வெண்ணெயைத் திருடத் திட்டமிட்டான். இவன் அருகே ஒரு பெண் வெட்க மாகக் கோணிக் கொண்டு நின்றாள். நறுமணம் கமழ்கிற பாதங்களை அவள்மேல் வைத்து மேலே ஏறி வெண்ணெயைக் களவாடித் தின்றான். ஆனால், அதன்பிறகும், ‘‘வெண்ணெய் வெண்ணெய் வெண்ணெய்’’ என்றுதான் சொல்லிக் கொண்டிருக் கிறான். இவனுக்கு வெண்ணெய் மேல் அப்படி ஒரு பிரியம் ஏன் வந்ததோ? அதில் என்ன சுவையோ!’’
கண்ணன் வெண்ணெயைத் தின்பதோடு நிறுத்துவதில்லை. அதை வைத்துப் பல குறும்பு களையும் செய்வான்.

அன்றைக்கு அப்படிதான், நந்தகோபனைப் பார்ப்பதற்காக ஒரு விருந்தினர் வந்திருந்தார் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பயணக் களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தார்.
வழக்கம்போல், கண்ணன் அன்றைக்கும் வெண்ணெய் திருடினான். அதைத் தின்றதுபோக, மீதமிருந்த வெண்ணெயை அந்த விருந்தினருடைய வாயில் அப்பிவிட்டான்.
வெண்ணெயைத் திருடியது யார் என்று தேடிக்கொண்டு வந்த பெண்கள் அந்த விருந்தி னரைப் பார்த்தார்கள். அவருடைய வாயில்
வெண்ணெய் அப்பியிருப்பதால், அவர்தான்

வெண்ணெய் திருடியிருக்கவேண்டும் என்று நினைத்துவிட்டார்கள்!
அன்றொருநாள், இந்த வழிவந்த விருந்தினரும்
அயர்ந்து படுத்து உறங்கும் போதினிலே, கண்ணன் தின்றதுபோகக் கையில் இருந்த வெண்ணெயைஅந்த விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே!
நிந்தை மிகு பழிஇங்கே, பாவம் அங்கே!
இதையெல்லாம் அந்தக் கண்ணனின் தாய் யசோதையிடம் புகார் சொல்லலாம் என்று சென்றால், அங்கேயும் கண்ணன் வந்து நிற்கிறான். குறும்பு செய்கிறான்:
அன்னை யசோதை அருகினில் சென்றுஇவன்

வெண்ணெய் திருடி வந்த வித்தை சொல்லப்போனால்
அன்னையின் பின்னே சென்றுஅணைத்துக்கொண்டு நின்று
‘சொல்லாதே’ என்றுகண்ணால் சொல்லிடும்
கள்ளப் பார்வை ஒன்றே போதுமே!

இதையும் மீறி, யாரோ யசோதையிடம் புகார் சொல்லிவிட்டார்கள். அவள் கண்ணனை அழைத்துக் கண்டிக்கிறாள். ஆனால், அவளால் கோபமாகப் பேசவும் இயலவில்லை. அந்தத் தடுமாற்றத்தை இந்தப் பாடலில் பார்க்கலாம்:
கொஞ்சும் மழலை பேசி, குறுநகையைவீசி
குற்றம்தனைமறைக்கப்பாராதே, நான்

கோபம் கொண்டால் கொஞ்சத்தினில் மாறாதே!
கெஞ்சினால் மிஞ்சும் கண்ணா, மிஞ்சினால் கெஞ்சுவாய்,
கிட்டகிட்டவந்தபோது அஞ்சுவாய்,

பஞ்சமோ இங்கு என்ன பாலுக்கும் வெண்ணெய்க்கும்?
‘‘நம் வீட்டில் பாலுக்குக் குறைச்சலா? வெண்ணெய்க்குக் குறைச்சலா? நீ ஏன் அக்கம் பக்கத்தில் சென்று திருடவேண்டும் கண்ணா? கேட்டால் நானே உனக்குத் தருவேனே!’’
‘‘நான் அவங்க வீட்ல வெண்ணெய் திருடலைம்மா’’ என்கிறான் கண்ணன். அன்னையின் கோபத்தைத் தணிப்பதற்காகப் புல்லாங்குழல் ஊதுகிறான்.
மெய்யெல்லாம் வெண்ணெய் பூச்சு வெட்ட வெளிச்சமாச்சு

வேணு கானம் ஊதிவிட்டால் போதுமா கண்ணா?
‘‘உன் உடலெல்லாம் வெண்ணெய் பூசியிருக்கிறது, அதைப் பார்த்தாலே நீ செய்த
தவறு வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது!’’ என்கிறாள் யசோதை, ‘‘புல்லாங்குழல் வாசித்து என்னை ஏமாற்றப் பார்க்காதே!’’

இப்படி வெண்ணெய் உண்ணும் கண்ணனை ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் அழகழகாகப் பாடிவைத்திருக்கிறார். ஒவ்வொரு பாடலிலும், அந்த வெண்ணெய்க்கு இணையான சுவை!
அதெல்லாம் சரி.கண்ணன் ஏன் வெண்ணெய் திருடவேண்டும்?யசோதை கேட்பது நியாயம்தானே? நந்தகோபன் வீட்டில் ஏராளமான பசுக்கள் உண்டு.அங்கே பால், தயிர், வெண்ணெய்எதற்கும் குறைச்சலே இல்லை.ஆனால், கண்ணன் அதை யெல்லாம் சாப்பிடுவதில்லை, மற்ற வீடுகளுக்குச் சென்று அங்கே வைத்திருக்கும் தயிர், வெண் ணெயைத் தான் திருடித் தின்கிறான். மாட்டிக் கொள்கிறான். திட்டு வாங்குகிறான். இதெல்லாம் எதற்கு?

இதற்குப் பலவிதமான விளக்கங்கள் தரப்படு கின்றன. அவற்றுள் மிக அருமையான ஒன்று, நம்மாழ்வார் சொல்வது:
உண்டாய்உலகு ஏழ் முன்னமே,
உமிழ்ந்து, மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய்ச் சிறு மனிசர்
உவலை யாக்கை நிலைஎய்தி!

திருமால் ஏழு உலகங்களையும் முன்பு உண்டவன், உமிழ்ந்தவன். அதன்பிறகு, மாயை யினால் இந்த உலகத்தில் ‘சிறு மனிச’னாக அவதரித்தான், வெண்ணெயை உண்டான்.
கவனமாக, ‘சிறு மனிசர்’ என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார் நம்மாழ்வார். அப்பேர்ப்பட்ட இறைவன், சிறிய மனிதனாக நம்முடன் வாழ்ந்தானே, அவனுக்கும் நமக்கும் தொடர்பு ஏற்படுத்த ஒரு கருவி வேண்டாமா?

கண்ணனுக்கு வெண்ணெய் என்பது அப்படிப் பட்ட ஒரு கருவிதான். அதன்மூலம், அவன் நம்மைப் போன்ற சிறு மனிதர்களுடன் உறவாடு கிறான். ‘வெண்ணெய் தாருங்கள்’ என்று கேட்கிறான், தராவிட்டால் வேண்டுமென்றே மாட்டிக் கொள்வதுபோல் திருடுகிறான். பிடிபடுவது போல் நடிக்கிறான், ‘எங்க அம்மாகிட்ட சொல்லிடாதீங்க’ என்கிறான். எல்லாம் ஒரு நாடகம், வெண்ணெயைக் காரணமாக வைத்து சிறு மனிசர்களுடன் அன்பாகப் பழகுகிறான் கண்ணன். அதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!

ஓவியங்கள்: வேதகணபதி
(தொடரும்)

என். சொக்கன்