கண்டான் சீதையை



எங்கெங்கு தேடினும் தன் நாயகனின் துணையைக் காணாது மனம் சலிப்புற்றான். தான் இங்கு வந்ததே வீண்தானோ என்ற விரக்தி நிலைக்கும் வந்தான். ஒருவேளை ராவணன் சீதையைக் கொன்றிருப்பானோ என்று அச்சம் கொண்டான். தன்னை நம்பி இங்கு அனுப்பிய ராமனின் நம்பிக்கை நிலைகுலையுமாறு ஆகிவிடுமோ என்று பயந்து நடுங்கினான். தான் இந்தப் பணியை மேற்கொள்ள லாயக்கற்றவனாகி விட்டோமோ என்றும் சலித்துக்கொண்டான்.

தன் மீதே வெறுப்பும், இயலாமை உணர்வும் படர, இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்ற துயர நிலைக்கும் வந்து விட்டான். 'சீதையைக் காணாது திரும்பப் போய் என் ஸ்ரீராமனுக்கு ஏமாற்றமளிப்பதைப் போன்றக் கொடியவினை வேறில்லை' என்று எண்ணித் துயருற்றான் அனுமன்.

வேதனையால் நொந்து தள்ளாடியபடி அசோக வனத்துக்கு வந்தான் அனுமன்.
அங்கே உள்ளே நுழைந்ததும் ஆச்சரியமானான்.

அட! இதென்ன, மரங்கள் அடர்ந்த இந்த வனத்திலும் சில பெண்கள் இருக்கிறார்களே! யார் இவர்கள்? அசோகவனத்தில் ஒரு அழகிய பெண், மரத்தடியில் சோகமே வடிவாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அவளுடைய முகத்தில் ஒளிர்ந்த தெய்வீகம், அவள்தான் சீதை என்பதை உள்ளுணர்வுக்கு உணர்த்தியது. இலைகளும் சலசலக்காத வண்ணம் அமைதியாக அந்த மரத்தின் மீதேறி ஒளிந்து கொண்டான்.

சீதையைச் சுற்றி அரக்கிகள். நடுவிலே தீவினையால் அகப்பட்ட தளிர் மான் போல சீதை. அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியபடி இருந்தது.
(பிரபுசங்கர் எழுதிய சிரஞ்சீவி
புத்தகத்திலிருந்து)