மங்களங்கள் அருள்வார் மந்திரபுரீஸ்வரர்



‘கோயில்’ என்றால் தில்லையைக் குறிப்பதே மரபாகும். அதேபோல் திருவுசாத் தானத்தை திருஞானசம்பந்தர் தில்லை கோயிலுக்கு நிகராக குறிப்பிடுவதால் இத்தலம் கோயிலூர் என்றழைக்கப்பட்டது. விஸ்வாமித் திரருக்கு இத்தலத்தின் அர்த்தஜாம பூஜையின்போது திருத்தாண்டவத்தினை ஆடிக் காட்டியதால் ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்பட்டது. ஏனெனில், அர்த்தஜாம பூஜையின் சிறப்புக்குரிய தலம் சிதம்பரமே ஆகும்.

ராமன் வானரச் சேனைகளோடு கடலில் பாலம் அமைத்தான். முதலில் கட்டிய பாலம் வெள்ளத்தால் அமிழ்ந்தது. இரண்டாவது பாலத்தை மேற்குத் திசையில் கட்ட, அதுவும் மீன்களால் அழிந்தது. இப்பகுதியைச் சார்ந்த ஊர் இன்றும் 'மீன் பூசல்' (மீமிசல்) என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறாக, கட்டப்படும் பாலங்கள் அடுத்தடுத்து பாதிப்புறு வதைக் கண்டு கலங்கிய ராமபிரானைத் தேற்றியது ஒரு அசரீரி. அதன்படி, சூதவனம் என்கிற இத்தலத்திற்கு வந்தார் ராமர். இங்கேயே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து அகத்திய மாமுனிவர் உபதேசித்த மந்திரங்களை அவர் பிரயோகித்தார். அதனால் இத்தலம் மந்திரபுரி என்றழைக்கப்படுகிறது. இப்படி ராமபிரான் சொன்ன மந்திரங்களைச் செவி கொடுத்து கேட்ட லிங்கமாக இது அமைந்திருப்பதை திருஞானசம்பந்தர் கீழேயுள்ள பாடல் மூலமாக விளக்குகிறார்.

‘‘நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்
போரிடைச் சுக்ரீவன் அனுமன் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள்செய்த எம்
சீருடைச் சேடர் வாழ் திருவுசாத்தானமே.’’

கருடன் ஒருமுறை தேவேந்திரனை எதிர்த்து வென்று அமுதத்தைப் பெற்று நாகலோகத்திற்குச் சென்றான். அவ்வாறு செல்லும் வழியில் அமுதத் துளிகள் பூமியில் சிந்தின. சிந்திய துளிகள் அனைத்தும் மாமரங்களாக முளைத்தன. மாமரங் களால் சூழப்பட்ட தலமாதலால் அமுத சூதவனம் என்றழைக்கப்படுகிறது. மூலவர் மந்திரபுரீஸ்வரர் ஆவார். லிங்க வடிவான மூலவருக்கு சுயம்புலிங் கேஸ்வரர், நீலகண்டேஸ்வரர், வருணேஸ்வரர், அகுந்தேசர், மார்க்கண்டேஸ்வரர் ஆகிய பல திருநாமங்கள் உள்ளன. அம்பிகையின் திருநாமம் பெரியநாயகி. இந்த அம்பிகைக்கு பெரிய நாச்சியார், பிரஹதாம்பாள், பிரஹந்நாயகி என்றும் பல பெயர்கள் உள்ளன.

கருவறையில் மந்திரபுரீஸ்வரர் லிங்க வடிவமாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வெண்மை நிறத்தில் சற்று வடபுறம் சாய்ந்த நிலையில் உள்ளார். ராமபிரான் சொன்ன மந்திரங்களைச் செவி கொடுத்துக் கேட்டதால் ஏற்பட்டதுதான் இந்த சாய்வான தோற்றம். ராமருக்கு ஞான உபதேசம் செய்தமையால் புத்தி பிரஸாதேஸ்வரர் என்றும் இந்த இறைவன் அழைக்கப்படுகிறார்.
இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முற்காலச் சோழர்கள் காலத்தில் ஏற்பட்டது என்பர்.

 ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. கோயிலுக்குள் இரண்டு பிராகாரங்கள் உள்ளன. வெளியே சந்நதி வீதியும், கோயிலின் தேர் வலம் வர நான்கு ராஜ வீதிகளும் உள்ளன. கோயிலுக்குள் கொடிமரமும், நந்தியும் அமைந்துள்ளன. இதை அடுத்து உள்ளே தென்புறம் மணிகர்ணிகை எனும் திருக்குளம் அமைந்துள்ளது.

கோயில் சுற்றின் வடப்புறத்தில் தென்திசை நோக்கி பெரிய நாயகி அம்மன் கோயில் உள்ளது. அதை அடுத்து வசந்த மண்டபம். இரண்டாம் கோபுரம் உள்கோபுரமாக மூன்று நிலைகளைக் கொண்டிருக்கிறது. இதற்கு சட்டைக் கோபுரம் என்று பெயர். கோபுர வாயிலில் விநாயகரும், அதிகார நந்தியும் உள்ளனர். உட்சென்றால் சபா மண்டபத்தில் நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர், படிமங்கள் தெற்கு நோக்கி உள்ளன. நடராஜர் சந்நதிக்கு கிழக்குப்புறம் பைரவரும், சந்திரனும் காட்சி தருகிறார்கள்.

கன்னி மூலையில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி தம் பரிவாரங்களுடன் அமைந்துள்ளனர். இதையடுத்து உற்சவ மூர்த்தியான சோமாஸ்கந்தர் சந்நதி. இதன் வடபுறம் திருமாளிகை பத்தியில் வருணன் பூஜித்த லிங்கம், ராமர் வழிபட்ட லிங்கம், மார்க்கண்டேயர் வழிபட்ட லிங்கம், அன்னபூரணி, விநாயகர் சிலைகளை காணலாம். வரை மூலையில் முருகப் பெருமான் வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர் கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள். வடபுறத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியை தரிசிக்கலாம். வடக்குத் திருச்சுற்று மாளிகைப்பத்தில் சப்த மாதர்களுக்கும், சனிபகவானுக்கும் தனிச் சந்நதி உள்ளன. இங்குள்ள தெற்கு நோக்கிய சனீஸ்வரரை அனுகூல சனீஸ்வரர் என்று அழைக்கின்றனர்.

மகாமண்டபத்தின் நுழைவாயிலில் தென்புறத்தில் சங்கநிதியும், வடபுறத்தில் பதுமநிதியும் கிழக்கு நோக்கி திருக்காட்சி நல்கி வருகின்றனர். மேலும், நிருத்த மண்டபத்தில் உற்சவ மூர்த்தியான வலஞ்சுழி விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர், சந்திரசேகரர், பிரதோஷ விநாயகர், சமயக்குரவர், நால்வர், சண்டேஸ்வரர், அஸ்திரதேவர், நடராஜர், சிவகாமி அம்பாள், மாரியம்மன், பிடாரியம்மன், சூலப் பிடாரி அம்மன், அத்திர பலி, ஆதிசேஷன் ஆகியோரை தரிசிக்கலாம். மகாமண்டபத்தில் நந்தியும், வெண்கல பலி பீடத்தையும் காணலாம். அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கிய ஐம்பொன்னாலான யோக சக்தி அம்மனை தரிசிக்கலாம்.

இது தேவாரப் பாடல் பெற்ற 107வது திருத்தலமாகும். பதஞ்சலி முனிவர் இங்கே வழிபட்டிருக்கிறார். பதஞ்சலி முனிவரின் செப்புத் திருமேனியும் இங்குள்ளது. தல விநாயகர், சூதவன விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இரு கரங்களிலும் மாவிலைக் கொத்துகளும், துதிக்கையில் மாங்கனியும் ஏந்தியிருக்கிறார். ஆதிசேஷன் இத்தல ஈசனை வழிபட்டதுடன் ராஜசூடாமணி என்ற சோழ மன்னனைக் கொண்டு இந்த ஆலயத்தை அமைத்து, வழிபாடுகளுக்கான ஏற்பாட்டையும் செய்தார். வருண தேவன் தன் பெருநோய் தீர இங்கு வந்து வழிபட்டு உய்வு பெற்றான்.

அக்னி தீர்த்தம், அனுமன் தீர்த்தம், நெல்லிக் குளம், குஞ்சுக் குளம், அகழி போன்று காணப்படும் ஆதிசேஷன் தீர்த்தம் ஆகியவை இத்தல தீர்த்தங்களாக விளங்குகின்றன.
சித்திரையில் பிரம்மோற்சவமும், ஆனி மற்றும் மார்கழியில் நடராஜர் திருவிழாவும், புரட்டாசியில் நவராத்திரி விழாவும், ஐப்பசியில் கந்த சஷ்டி விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த மந்திரபுரீஸ்வரர் ஆலயம்.

- ஏ.கிருஷ்ணன்