நீத்தார் கடன் நிறைவேற்றிய நாயகன்



ராமன் எத்தனை ராமனடி!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்புள்ளம்பூதங்குடியில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் இது 10வது. புதனுக்குரிய பரிகார தலமான இங்கு, பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது உகந்தது. மேலும் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபாடு நடத்துகின்றனர். பதவி உயர்வுக்காக பிரார்த்திப்பவர்கள், பிராகாரத்தில் உள்ள யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால், உத்யோக உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது அவனுடன் போரிட்ட ஜடாயு, குற்றுயிராக வீழ்ந்து கிடந்தார். அந்த வழியே வந்த ராம-லட்சுமணர், தீனமான முனகல் குரல் கேட்கவே, ஜடாயுவின் அருகே சென்று பார்த்தனர். ஜடாயு, ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தை கூறிவிட்டு உயிர் துறந்தார்.

ஜடாயு இறப்பால் வருந்திய ராமன், அவருக்கு ஈமக்கிரியை செய்ய விரும்பினார். இப்படி நீத்தார் கடன் செலுத்தும்போது மனைவியும் உடனிருக்க வேண்டும் என்பது சாஸ்திர விதி. ஆனால், சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார். உடனே ராமனுக்கு உதவி புரிய, சீதையின் மறு அம்சமாகிய பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு இணைந்து ஜடாயுவுக்கான கிரியைகளை செய்து முடித்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் ராமர் கோயில் அமைக்கப்பட்டது.

சரும நோய் தீர்க்கும் சீதாராமன்

சென்னையை அடுத்த செங்கல்பட்டிற்கு அருகில் உள்ளது பொன்பதர்கூடம். இத்தலத்திலுள்ள ராமர் உற்சவமூர்த்தி மிகவும் விசேஷமானது. இந்த சிலையின் விரல், நகம் மற்றும் கை ரேகைகளும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. ராமபிரான், மகாவிஷ்ணு போல காட்சி தந்த தலமென்பதால், இவரது மார்பில் மகாலட்சுமி அமைந்திருக்கிறார். தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கவும், பிரிந்த தம்பதியர் மீண்டும் சேரவும் இங்கு வேண்டிக்கொள்கின்றனர். சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சுவாமிக்கு துளசி மாலை அணிவித்து, கல்கண்டு படைத்து வணங்குகிறார்கள். சீதையை திருமணம் செய்யும் முன்பு ராமர், இடது கால் பெருவிரலால் சிவதனுசின் கீழ்ப் பகுதியை மிதித்துக்கொண்டு, ஒடித்தார். இந்நிகழ்வை விவரிப்பதுபோல, இவர் இடது திருவடியை முன்புறமாக மடித்து வைத்த நிலையில் காட்சியளிக்கிறார்.

பரிந்துரைத்த அனுமன்!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள கோதண்டத்தில் ராமர் திருவருள் புரிகிறார். மூலஸ்தானத்தில் ராமர்-சீதை- லட்சுமணர் காட்சி தருகின்றனர். ராமர் கையில் கோதண்டத்துடன் (வில்) இருப்பதால், அவர் ‘கோதண்டராமர்’ என்றானார். இந்தத் தலம் ‘கோதண்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது. விபீஷணன் ராமபிரானை சரணடைய வந்தபோது, வானரப் படையினர், விபீஷணன் மீது சந்தேகம் கொண்டு அடைக்கலம் தரக்கூடாது என்றனர். ஆனால், ஆஞ்சநேயரோ விபீஷணனின் நடவடிக்கை களை தான் இலங்கையில் கவனித்ததாகவும், அவன், ராவணனுடைய ஒழுங்கீனத்தைக் கண்டிப்பவனென்றும் சொல்லி, அவனை ராமசேவைக்கு அனுமதிக்கும்படி பரிந்துரைத்தார்.

இதனால்தான் இங்கே ராமருக்கு அருகில் உள்ள அனுமனுக்கு ‘பரிந்துரைத்த ஆஞ்சநேயர்’ என்று பெயர். இவரிடம் நமது நியாயமான கோரிக்கைகளை தெரிவித்தால், அதை ராமரிடம் பரிந்துரைத்து நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை. இங்கு ராமரை வணங்கியபடி விபீஷணன் நிற்பது அபூர்வமான காட்சி. அளவில் சிறிய கோயில் இது. கருடாழ்வாரும், முன் மண்டபத்தில் ராமானுஜரும் மட்டும் உள்ளனர்.

குறுக்கு வழியில் தலைமைப் பதவி அடைய நினைப்போரை ஒடுக்கி வைப்பவர் இந்த ராமர். தரம் கெட்ட ராவணனுக்குப் பதிலாக ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த விபீஷணரை இத்தலத்தில் பதவியில் அமர்த்தியதால், நியாயமான வழியில் தலைமைப் பதவி கிடைக்க இவரை வணங்கலாம். தீயவர் சேர்க்கையிலிருந்து விடுபடவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். விபீஷணர் பட்டாபிஷேகம், ஆனி மாத வளர்பிறை நவமியன்று நடக்கிறது. வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல் பகுதிகளுக்கு மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது.